இனி எல்லாமே ஏ.ஐ - 29: தரவுகள் வழி தான தர்மம்!


தொண்டு நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் ஏ.ஐ பயன்படும் விதத்தைக் கடந்த வாரம் பார்த்தோம். இதன் நீட்சியாக நிதி திரட்டுவதிலும், நன்கொடை அளிப்பதிலும் ஏ.ஐ பயன்படும் விதம் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம். தான தர்மங்களும் முறைப்படி நடப்பதுதானே அனைவருக்கும் நல்லது!

நன்கொடை அதிகரிக்க…

தொண்டு நிறுவனங்கள் எனும்போதே அவற்றுக்கான நிதியுதவி முக்கியம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். சேவை அமைப்புகள் அவற்றின் இலக்குகளை அடைய போதிய நிதி ஆதாரம் தேவை. உலகில் அள்ளிக்கொடுப்பவர்களும், கிள்ளிக்கொடுப்பவர்களும் அநேகம் பேர் இருக்கின்றனர் என்றபோதிலும், அதை விட அதிகமாகவே நேசக்கரங்களும், நன்கொடையும் தேவைப்படுகின்றன.
மேலும், நன்கொடை அளிப்பவர்களைச் சரியாகக் கண்டறிந்து தொடர்பு கொள்வது என்பது தொண்டு நிறுவனங்களுக்குச் சவாலான செயலாகவே இருக்கிறது. அதே நேரத்தில், மனமுவந்து நிதி அளிப்பதற்கு ஏற்ற சேவைத் திட்டங்களைக் கண்டறிவது நன்கொடையாளர்களுக்கும் கடினமாக இருக்கிறது. எனவே, நல்ல செயல்களுக்கான நிதி தேவைக்கும், நன்கொடை அளிக்க விரும்புகிறவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது.

“பணம் கொடுப்பது என்பது எளிதானது, எல்லா மனிதர்களுக்கும் சாத்தியமானது. ஆனால், யாருக்கு, எவ்வளவு, எப்போது, எப்படி, எதற்காகக் கொடுப்பது என தீர்மானிப்பது எளிதல்ல” என கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டாட்டில் கூறியிருப்பதை இங்கு பொருத்திப்பார்க்கலாம்.

இந்தப் பின்னணியில், அமேசான் அல்லது ஃபிளிப்கார்ட் தளத்தில் பொருட்களை ஆர்டர் செய்வது போலவே, மனதுக்கு நெருக்கமான சேவை அமைப்புகளுக்கு நிதி அளிக்கவும் எளிதான வழி இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப்பாருங்கள். இந்த இடத்தில்தான் ஏ.ஐ வருகிறது.

ஒருங்கிணைக்கப்படும் சேவை 

சர்வதேச அளவிலான நிதி தேவை தொடர்பான தகவல்கள் மற்றும் கொடுக்கத் தயாராக இருப்பவர்களின் விவரங்கள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அமைந்திருந்தால், கொடையாளர்களை அணுகுவதும், கொடையாளர்கள் நன்கொடை கொடுப்பதும் எளிதாக இருக்கும்தானே! இத்தகைய ஒரு மேடை வாயிலாக, சேவை அமைப்புகளின் இருப்பிடம், நோக்கம், இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்து நன்கொடையாளர்கள் நிதி அளிக்கலாம். சேவை அமைப்புகளின் செயல்பாடு, நம்பகத்தன்மையைத் தெரிந்துகொண்டும் நிதி அளிக்கலாம்.

ஏற்கெனவே, ஃபேஸ்புக்கும், நெட்ஃப்ளிக்ஸும் தங்கள் சேவையை மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற தகவல்களை அளிக்க தரவுகளையும், ஏ.ஐ நுட்பத்தையும் பயன்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் பரிந்துரை முறையை சேவை அமைப்புகளும் பயன்படுத்தினால், தரவுகள் அடிப்படையில், தொண்டு நிறுவனங்களையும், கொடையாளர்களையும் இணைத்து வைப்பது எளிதாகும்!

இதுபோலவே, உலக அளவிலான நல்லெண்ணத் திட்டங்களுக்கான கொடையாளர்களையும் சென்றடை யலாம். தனியார் நன்கொடை தொடர்பான 2018-ம் ஆண்டுக்கான அறிக்கை ஒன்று, 28 சதவீத நிதியுதவி மட்டுமே அதிகம் வளர்ச்சி அடையாத நாடுகளைச் சென்றடைந்ததாகத் தெரிவிக்கிறது. அதுமட்டும் அல்லாமல், பல நேரங்களில் நிதியுதவி உள்ளூர் மக்களின் தேவைக்கேற்ப அமையாமல் போய்விடுவதாகவும் தெரியவந்துள்ளது. கொடையாளர்களையும், சேவை அமைப்புகளையும் இணைக்கும் இணைய மேடை மூலம் இந்தக் குறையைப் பெருமளவு போக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஐ சார்ந்த பரிந்துரை அமைப்பு இதற்குக் கைகொடுக்கும். ஏ.ஐ மூலம் இயங்கும் கிளவுட் சார்ந்த இணைய மேடை, நிகழ் நேரத்தில் நன்கொடைகள் தேவையானவர்களைச் சென்றடைய வழிசெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி சென்று சேரும் இடம்

கொடுப்பது என்பது மனிதர்களின் பொதுவான உணர்வுதான் என்றாலும் அதைத் திறம்படச் செய்ய ஏ.ஐ வழிகாட்டும். ஏனெனில் இயந்திரங்களால் தரவுகளையும், எண்ணிக்கைகளையும் வெகுவேகமாக அலசி ஆராய்ந்து அவற்றில் ஒளிந்திருக்கும் வார்ப்புகளைக் கண்டறிந்து அதற்கேற்ப வழிகாட்ட முடியும். இதுவே நன்கொடை யாளர்கள் தங்கள் மனதுக்கு நெருக்கமான திட்டங்களைத் தேர்ந்தெடுத்து உதவ அடிப்படையாக அமைகிறது. இதனால் கிடைக்கும் மனதிருப்தி அளவில்லாதது. 

நாம் கொடுக்கும் நிதி எங்கு போகிறது. எதற்காகச் செலவாகிறது, யாருக்குப் பயன் அளிக்கிறது என சரியாகத் தெரியாமல் இருப்பதைவிட, தேவையானவர்களுக்கு உதவ நிதி அளிப்பது மேலும் பலரை நிதி அளிக்க ஊக்குவிக்கும்.

அதுமட்டும் அல்ல, சேவை அமைப்புகள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு இடையிலான தகவல் பாலமாகவும் ஏ.ஐ செயல்படும் வாய்ப்பிருக்கிறது. ‘சாட்பாட்’ எனும் அரட்டை மென்பொருட்கள் இதற்குக் கைகொடுக்கும் என்கின்றனர். எப்படி வங்கிச் சேவைக்கான தகவல்களையும், வர்த்தகத் தகவல்களையும் சாட்பாட்கள் உரையாடல் மூலம் பயனாளிகளுக்கு அளிக்கின்றனவோ அதேவிதமாக, செயற்கை நுண்ணறிவு திறனுடன் உருவாக்கப்பட்ட அரட்டை மென்பொருட்கள், சேவை அமைப்புகள் சார்பில் நன்கொடையாளர்களுடன் உரையாடி அவர்களுக்குத் தேவையான தகவல்களை அளிக்கும். இத்தகைய சாட்பாட் கொடையாளர்களின் தனிப்பட்ட தன்மைக்கேற்ற பரிந்துரைகளையும் வழங்கலாம்.

தரவுகள் சார்ந்த செயல்பாடு

சமூக ஊடக ஜாம்பவானான ஃபேஸ்புக், தனது மேடையில் திரட்டப்படும் தரவுகளைக் கொண்டு இலக்கு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விளம்பரத்தை வழங்குவது போலவே, பயனாளிகளின் நம்பிக்கைகளுக்கு ஏற்ற சேவை அமைப்புகளைப் பரிந்துரைத்து நன்கொடை அளித்தலை எளிதாக்குவதற்கான திட்டம் வைத்திருப்பதாகவும் தெரிகிறது. நன்கொடைகளுக்குப் பெயர்பெற்ற ‘ராக்பெல்லர்’ அறக்கட்டளை தனது திட்டங்களுக்கு ‘வழிகாட்டு முதன்மைத் தரவு அலுவலரை’ நியமித்திருப்பதும், இதுபோன்ற எதிர்பார்ப்பில்தான் என்கின்றனர்.

தரவுகள் சார்ந்த செயல்பாடு சேவை நிறுவனங்கள் நிதி பெற உதவுவதோடு, அவற்றின் செயல்பாடுகள் வெளிப்படையான தன்மையுடன் அமையவும் வழிகாட்டும் எனக் கருதப்படுகிறது. ஏனெனில், பயன்பாடு தொடர்பான தகவல்கள் விரல் நுனியில் கிடைக்கும். இதுவும் கொடையாளிகளை ஊக்குவிக்கும் அம்சமாக அமையலாம்.

இப்படி கொடையளித்தலில் ஏ.ஐ பல வகைகளில் உதவும் என்றாலும், இவற்றுக்கு அடிப்படையான அல்கோரிதம்கள் சார்பு இல்லாமல் இருப்பது முக்கியம் என்ற கருத்தும் வலியுறுத்தப்படுகிறது. தரவுகள் சேகரிப்பிலும், அல்கோரிதம் உருவாக்கத்திலும் பல வகையான உள்ளார்ந்த சார்புகள் இருப்பதாக எச்சரிக்கப்படும் நிலையில், சேவை அமைப்புகளுக்கான அல்கோரிதம்கள் பாரபட்சம் இல்லாத தரவுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பது ஈகையிலும், அதன் பயன்பாட்டிலும் சமத்துவத்தைக் கொண்டுவரும்!

ரத்த தான மேடை

ஃபேஸ்புக் நிறுவனம் தனது மேடையில் பலவிதமான சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் முக்கியமானது ரத்த தான சேவையாகும். இந்தச் சேவை ரத்த வங்கிகளுடன், ரத்த தானம் செய்யத் தயாராக இருப்பவர்களை இணைத்து வைக்கிறது. பெரிய அளவில் இந்த வசதி சிறப்பாகச் செயல்பட ஏ.ஐ பயன்படுத்தப்படுகிறது. ரத்த தானத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அவர்கள் நிலைத்தகவல்கள் மூலம் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப ரத்த தான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியப் பயனாளிகள், ஃபேஸ்புக் தளத்தை ரத்த தானத்துக்கான பாலமாகப் பயன்படுத்திய விதமே இந்தச் சேவைக்கான உந்துதல் என்பது, கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

(தொடரும்)

x