இசை வலம்: மனிதநேயம் எனும் பொதுமொழி!


வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ‘எர்த்சிங்க்' (EarthSync) தயாரித்திருக்கும் ஆவணப் படம் ‘லயா ப்ராஜெக்ட்’. சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதுகளைப் பெற்றிருக்கும் இந்த ஆவணப்படத்தைத் தற்போது இணையத்திலும் பார்க்கலாம். 2004-ல் நிகழ்ந்த சுனாமி பேரிடரின்போது, தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சமூகத்துக்குச் சேவை செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், நாடு, மொழி, மதம், சாதி, இன பேதங்களைக் கடந்து மனித நேயத்தைப் போற்றும் வகையிலும், பன்முகக் கலாச்சாரத்தையும் இசையையும் கொண்டாடும் வகையிலும் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சுனாமி பேரிடரை எதிர்கொண்ட இந்தியா, இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா, மாலத்தீவு, மியான்மர் ஆகிய ஆறு ஆசிய நாடுகளுக்கும் பொதுவான மொழி, பன்முகக் கலாச்சாரம் ஆகியவற்றை இசையின் துணைகொண்டு அரங்கேற்றும் படைப்பு இது. மனித நேயத்தை வளர்த்துக்கொள்ளவும் இயற்கையின் தாத்பரியங்களைப் புரிந்துகொள்ளவும் நம்மைத் தூண்டும் காட்சிப் பதிவும்கூட. ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் பாடலே இதன் தரத்துக்கான அத்தாட்சி!

ஆவணப் படத்தைக் காண: www.layaproject.com

x