தொங்கலில் தோப்பு வெங்கடாசலம்!


கொங்கு மற்றும் வடக்கு மண்டல அதிமுகவினரையும் அமமுகவினரையும் திமுகவுக்கு ஈர்க்கும் வேலைகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறாராம் அமைச்சர் செந்தில் பாலாஜி. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனை இழுப்பதிலும் முனைப்பு காட்டினாராம். ஆனால் அவரோ, செந்தில் பாலாஜியை ஓவர் டேக் செய்துவிட்டு உதயநிதி ரூட்டில் அறிவாலயத்துக்குப் பயணமாகிவிட்டாராம். இதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தை திமுகவுக்குக் கொண்டுவர செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினாராம். இதைக் கேள்விப்பட்ட ஈரோடு மாவட்டத்து அமைச்சர் முத்துசாமி, “எங்க மாவட்டத்துக்குள்ள தேவையில்லாம நீங்க எதுக்கு மூக்கை நுழைக்கிறீங்க?” என்றாராம்.“நாங்க எல்லாம் ஒரு காலத்துல ஒண்ணா இருந்தவங்க. அந்த உரிமையில தான் பேசினேன்” என்றாராம் செந்தில் பாலாஜி. அதற்கு, “நீங்கெல்லாம் ஒண்ணா இருந்தவங்கன்னா... நாங்க மட்டும் எங்க இருந்தோம். நானும் அதிமுகவுல இருந்து வந்தவன் தானே. எனக்குத் தெரியாதா, யாரச் சேர்க்கணும் யாரை ஒதுக்கணும்னு” என்று பொரிந்தாராம் முத்துசாமி. இதையடுத்து செந்தில் பாலாஜி கப்சிப் ஆகிவிட்டாராம். இதையடுத்து, யாரை நம்பி திமுகவில் இணைவது என்று புரியாமல் அந்தரத்தில் நிற்கிறாராம் தோப்பு. இதனால், எப்போதோ நிகழ்ந்திருக்க வேண்டிய அவரது திமுக சங்கமம் தற்காலிகமாக தடைபட்டு நிற்கிறதாம்.

x