குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
ஆடியோ ரிலீஸ்கள் மூலம் அதிமுக தலைவர்களை அலறவிட்டுக் கொண்டிருந்த சசிகலா, சின்னதாய் ஒரு இடைவேளை விட்டிருக்கிறார். அரசியல் பிரவேசம் தொடர்பாக அவரது அடுத்தகட்ட வரைவு திட்டங்கள் வரிசையாக ரெடியாகிக் கொண்டிருக்கின்றன.
தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என எதிர்பார்த்தார் சசிகலா. சசிகலா முகாமுடன் அப்போது பேச்சுவார்த்தையில் இருந்த ஓபிஎஸ்ஸும் அதைத்தான் எதிர்பார்த்தார். ஆனால், நடந்ததோ வேறு. 65 இடங்களைப் பிடித்து அசைக்க முடியாத சக்தியாக நின்றுவிட்டார் ஈபிஎஸ். இதனால், தோல்விக்கு பழிபோட்டுவிட்டு சசிகலா வீட்டுப் பக்கம் போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த ஓபிஎஸ்ஸே தனது முடிவை மாற்றிக் கொண்டு, எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பிடிக்க முட்டி மோதினார். அதையும் தனது சாதுரியத்தால் சமாளித்து, தானே எதிர்க்கட்சி தலைவராக முடிசூட்டிக் கொண்டார் ஈபிஎஸ்.
இந்த தொடர் நிகழ்வுகளை அடுத்துதான், தனக்கான அரசியல் இருப்பை உறுதிப்படுத்த ஆடியோ ரிலீஸ் ஆயுதத்தைக் கையில் எடுத்தார் சசிகலா. அவருக்கு இந்த யோசனையைச் சொன்னது இளவரசியின் மகனும் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநருமான விவேக் ஜெயராமன்.