கரு.முத்து
muthu.k@kamadenu.in
‘தவளை தண்ணீருக்கு இழுக்குமாம்... ஓந்தி மேட்டுக்கு இழுக்குமாம்' - பொருந்தாக் கூட்டணிகளை வர்ணிக்கப் பயன்படுத்தப்படும் சொலவடை இது. இன்றைய புதுவை அரசியல் நிலவரமும் ஏறத்தாழ இதே கதை தான்!
என்.ஆர்.காங்கிரஸ் ஒருபக்கம் இழுக்க, அதற்கு நேரெதிர் திசையில் பாஜக இழுவையாய் இழுத்துக்கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் ஒரு முழுமையான அரசாங்கத்தை அமைக்க முடியாமல், இவர்கள் நடத்தும் அதகளத்தில் புதுச்சேரி மக்கள்தான் நொந்துபோய்க் கிடக்கிறார்கள்.
பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கூட்டணி அமைப்பதில் ஆரம்பித்த குழப்பமும் சிக்கலும் வெற்றிபெற்று, ஆட்சியமைத்து அமைச்சர்களும் பதவியேற்றுவிட்ட நிலையிலும்கூட தொடர்கிறது. இதற்கிடையே துணை முதல்வர், சபாநாயகர் பதவிகள் எந்தக் கட்சிக்கு, எத்தனை பேருக்கு அமைச்சர் பதவி என்றெல்லாம் இரு கட்சிகளும் குடுமியைப் பிடித்துக்கொள்ளாத குறையாக குஸ்தியிட்டுக்கொண்டிருந்தன. எல்லாம் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், தற்போது யாருக்கு எந்தத் துறையை ஒதுக்குவது என்பதிலும் குழப்பமே நீடிக்கிறது!