க.விக்னேஷ்வரன்
vigneshwritez@gmail.com
ஆக்கபூர்வமான சக்திகளுக்குத் தடைகள் ஏற்பட்டால் காலப்போக்கில் முடங்கிவிடும். ஆனால், எதிர்மறையான விஷயங்கள் எப்படிப்பட்ட தடைகளையும் கடந்து மீண்டும் துளிர்த்துவிடும். சர்ச்சைக்குரிய பப்ஜி விளையாட்டுக்கு மாற்றாக, இந்தியாவில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் பி.ஜி.எம்.ஐ விளையாட்டும் இப்படியான சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகச் சொல்லி, நூற்றுக்கும் மேற்பட்ட சீன மொபைல் செயலிகளைக் கடந்த ஆண்டு தடை செய்தது மத்திய அரசு. இதில் பப்ஜி, டிக்டாக் போன்ற புகழ்பெற்ற செயலிகளும் அடக்கம். உலக அளவில் அதிகமான பயனர்களைக் கொண்டிருக்கும் பப்ஜிக்கு, இந்தியாவிலும் கணிசமான வாடிக்கையாளர்கள் உண்டு என்பதால் பப்ஜி தடை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேசமயம், மீண்டும் பப்ஜி விளையாட குறுக்குவழியில் உபாயங்களும் முன்னெடுக்கப்பட்டன. கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் தளங்களிலிருந்து அகற்றப்பட்டாலும் தொழில்நுட்ப உதவியுடன் ‘பப்ஜி குளோபல் வெர்ஷன்’ செயலியைத் தரவிறக்கி, பப்ஜி ரசிகர்கள் விளையாடி வந்தனர். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி கைதான மதன் அதற்குச் சரியான உதாரணம். இப்படியான ஒரு சூழலில், ஒன்பது மாத தடைக்குப் பிறகு ‘பேட்டல்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா’ (BattleGrounds Mobile India; சுருக்கமாக பி.ஜி.எம்.ஐ) என்ற பெயரில் மீண்டும் இந்தியாவுக்குள் அதிகாரபூர்வமாக நுழைந்திருக்கிறது பப்ஜி. சிலர் இதற்கு ‘பிக்மி’ என்றும் நாமகரணம் சூட்டியிருக்கிறார்கள்.