கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in
பகவான் கிருஷ்ணர் மீது சுமார் 1,300 பாடல்களுக்கு மேல் இயற்றி, அவரோடு ஆடிப்பாடி மகிழ்ந்த கிருஷ்ண பக்தை மீராபாய். அரண்மனை சுகபோகங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டு, சாமானிய மக்களோடு வாழ்ந்து, அவர்களுக்கு இறை பக்தியை ஊட்டியவர் மீராபாய்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் அரசை நிர்மாணித்தவர் ராவ்ஜோதா. அவரது மகன் ராவ்தூதாவின் இளையமகன் ரத்தன்சிங், தன் மனைவி வீரகுமாரியுடன் உதய்ப்பூரில் வசித்து வந்தார். 1480-ல் முஸ்லிம் அரசர்களுடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற ராவ்தூதா, மேடதா நகரத்தை கைப்பற்றினார். அந்த நகரத்தில் இருந்த 380 கிராமங்களையும் தனது அதிகாரத்துக்கு உட்படுத்தினார்.
ராவ்தூதா, அரசை நிர்வகிக்கும் பொருட்டு, மேடதாவில் இருந்து குடுகி, பாஜோலி போன்ற கிராமங்களை தனது இளைய மகன் ரத்தன்சிங்குக்கு அளித்தார். கண்ணன் மீது அதிக பக்தி கொண்ட ரத்தன்சிங் – வீரகுமாரி தம்பதிக்கு 1498-ல் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு ஸ்ரீ மீராபாய் என்று பெயர் சூட்டப்பட்டது.
பெற்றோரைப் போலவே மீராவும், சிறுவயதில் இருந்தே கண்ணனிடம் அதிக பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவர்களது அரண்மனைக்கு வந்த துறவி ஒருவர், கிரிதர கோபாலனின் விக்கிரகத்தை மீராவிடம் அளித்தார். அன்று முதல் அந்த கண்ணனின் விக்கிரகத்தை பட்டுத் துணிகள்,அணிமணி ஆபரணங்களால் அலங்கரித்து, பூஜை செய்து விளையாடினார் மீரா. உண்ணும்போதும் உறங்கும்போதும் விளையாடும்போதும் கண்ணனின் விக்கிரகத்தை தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தார் மீரா.
அரண்மனையிலும் கோயில்களிலும் நடைபெறும் பாகவதம், மகாபாரதம், பகவத் கீதை உபன்யாசங்களை தவறாமல் கேட்டு மகிழ்வார் மீரா. கண்ணனின் சரிதம் கேட்கக் கேட்க, எப்போதும் அவன் திருவிளையாடல் வைபவத்தையும் வீர சாகச செயல்களையும் நினைத்து மகிழ்ந்தார். இசையில் புலமை பெற்றதால், கண்ணனை நினைத்து பாடல்களைப் பாடியும் குதூகலித்தார்.
மீரா, பருவ வயதை அடைந்ததும், அரச வழக்கப்படி தோழியருடன் கன்னி மாடத்தில் வாழத் தொடங்கினார். மீராவால், கன்னி மாடம், கண்ணனின் கோயிலாக மாறியது. அங்கே கண்ணன் விக்கிரகத்தை, தங்க பீடத்தில் பிரதிஷ்டை செய்தார். திருமஞ்சன ஆராதனைகளுடன் பொன்னும் மணியும் சூட்டி ஆராதனை செய்தார், எந்நேரமும் அவன் மீது பாடல்கள் பாடி சங்கீத பஜனை செய்து கொண்டிருந்தார் மீரா. பல உபன்யாசகர்களை அழைத்து கிருஷ்ண கதாகாலட்சேபமும் நடத்தினார்.
கன்னி மாடத்தில் எப்போதும் பாட்டும் பூஜையும் நடப்பதால், ஊர்மக்கள் மீராவைப் பற்றி அவதூறாகப் பேசி வந்தனர். இந்தச் செய்தி அரசனுக்கு எட்டியது. கன்னி மாடம் சென்று மீராவுக்கு புத்திமதிகள் சொன்னார் ரத்தன்சிங். ஊர்மக்கள் பேச்சை நிறுத்த வேண்டும் என்றால், மீராவுக்கு உடனே திருமணம் செய்தாக வேண்டும் என்று எண்ணினார் ரத்தன்சிங். ஆனால், அதற்கு இணங்க மறுக்கிறார் மீரா. குன்றைக் குடையாகப் பிடித்த கோவர்த்தன கிரிதாரியின் புகழ் பாடுவதிலேயே தனக்கு விருப்பம் இருப்பதாகத் தெரிவிக்கிறார் மீரா. கண்ணனின் அடியார்களுடன் சங்கீர்த்தனங்களை பாடி ஆடுவதில் உள்ள சுகம் வேறு எதிலும் கிடையாது என்றும் தெரிவிக்கிறார்.
மீரா மீது கோபம் கொண்ட ரத்தன்சிங், நாட்கள் செல்லச் செல்ல, அவரை வெறுக்கிறார். மீராவை விஷம் வைத்துக் கொல்லவும் துணிகிறார். அரசனின் ஆணைப்படி தனது மகளுக்கு தானே விஷத்தை அளிக்கச் செல்கிறார் வீரகுமாரி. மகளைப் பார்த்ததும் குமுறி குமுறி அழுகிறார் வீரகுமாரி. தந்தையின் சூழ்ச்சியையும் தாயின் தவிப்பையும் புரிந்து கொண்ட மீரா, தனது வலது கையில் இருந்த கண்ணன் விக்கிரகத்தைப் பார்த்தார். இடது கையில் தாய் கொடுத்த விஷக் கிண்ணம். எதைப்பற்றியும் யோசிக்காமல், அந்த விஷத்தை அருந்தினார்.
கண்ணனின் அருளால் விஷம் அமுதம் ஆனது. கண்ணனின் விக்கிரகம் நீல நிறமாக மாறியது. விஷயம் அறிந்த அரசன், தனது தவறை உணர்ந்து, மகளிடம் மன்னிப்பு கேட்டார். கண்ணன் விக்கிரகத்தின் முன்பு விழுந்து வணங்கினார்.
1516-ல், தந்தையின் வற்புறுத்தலால் விருப்பமின்றி சித்தோர்கர் அரசன் ராணா சங்காவின் மகன் இளவரசன் போஜராஜனை மணந்தார் மீரா. போஜராஜன் குடும்பத்தின் குலதெய்வமான ‘துளஜ பவானி’ என்ற துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ள மீரா கட்டாயப்படுத்தப்பட்டார். பிறந்ததில் இருந்து கண்ணனையே வணங்கி வந்த மீராவுக்கு, இந்த கட்டளை அதிர்ச்சியாக இருந்தது.
துர்க்கை வழிபாட்டை ஏற்க இயலாது என்ற மீராவின் பிடிவாதத்தால், கணவர் போஜராஜன் கோபம் அடைந்தார். கணவர், மாமியார் பேச்சுக்கு அடங்காமல் இருந்த மீராவின் சுதந்திரமான போக்கை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எப்போதும் தனியாக பூஜை அறையில் அமர்ந்து தியானம், வழிபாடு என்று மீரா இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் கணவர், மாமனார், மாமியாருக்கு பணிவிடைகளை செய்து விட்டு, குடும்ப பொறுப்புகளை சரிவர செய்துவிட்டு, மீரா, கண்ணனை வழிபட்டார்.
கால்களில் சலங்கை கட்டிக் கொண்டு சாதுக்களுடனும் சந்நியாசிகளுடனும் பக்திக் கூட்டத்தாருடன் சேர்ந்து, தன் கிரிதாரி மீது மையல் கொண்ட வண்ணம் தன்னையும் மறந்து ஆடியும் பாடியும் வந்தார் மீரா.
ஒருநாள் மீராவின் பூஜை அறைக்குள் நுழைந்த போஜராஜன், மீரா தன்னை மறந்து கண்ணன் விக்கிரகத்துடன் பேசியபடி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மனைவிக்கு புத்தி பேதலித்து விட்டதோ என்று வருத்தப்பட்டார். இருப்பினும் மீராவின் விருப்பத்துக்கு இணங்க, அவருக்காக ஒரு கிருஷ்ணன் கோயிலை அமைத்துக் கொடுத்தார் போஜராஜன். அதன்பிறகு மீரா அந்த கோயிலிலேயே பெரும்பாலும் இருந்தார்.
மீராவின் கிருஷ்ண பக்தி, எங்கும் பரவியது. ஊர்மக்கள் அனைவருடன் இணைந்து, கிருஷ்ண சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டு வந்தார் மீரா. அவரது பக்தியைப் பற்றி கேள்வியுற்ற சக்ரவர்த்தி அக்பர், கண்ணன் கோயிலுக்கு ஒரு சேவார்த்தி போல வந்து, கண்ணனுக்கு முத்து மாலையை அளித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணன் புகழ் பாடிக் கொண்டிருந்ததால், அக்பர் வந்து சென்றதை மீரா கவனிக்கவில்லை. அக்பர் வந்த செய்தியை போஜராஜன் அறிந்து, மீராவைக் கடிந்து கொள்கிறார்.
மீராவுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது போல் இருக்கிறது. கணவனைப் பிரிந்து கண்ணன் புகழ் பாட பிருந்தாவனம் செல்கிறார். அந்த இடத்தில் கோஸ்சுவாமி என்ற கிருஷ்ண பக்தர் இருந்தார். அவருக்கு பெண்களைக் கண்டால் பிடிக்காது என்பதை அறிகிறார் மீரா. அவரைப் பார்க்க அவரது இல்லம் செல்கிறார். ஆனால், பக்தரின் சீடர்கள் மீராவை பெண் என்று கூறி அனுமதி மறுக்கின்றனர். அப்போது மீரா, “இங்கு கண்ணனே பதி. மற்ற அனைவரும் பெண்கள்தான்” என்று கூறி கோஸ்சுவாமிக்கு தன்நிலை உணர வைக்கிறார். பக்தரும் மீராவை தன் இல்லத்துக்குள் வருமாறு அழைக்கிறார். இந்தச் செய்தியை அறிந்த அக்பர், மன்னர் ராணாவுக்கு, “மீராவிடம் மன்னிப்பு கேட்டு அவரை மீண்டும் அரண்மனைக்கு அழைத்து வர வேண்டும். இல்லையேல் போர் ஏற்படும் வாய்ப்பு உறுதி” என்று ஓலை அனுப்புகிறார்.
இதையடுத்து போஜராஜன் தன் தவறை உணர்கிறார். ஒரு பக்த சிரோன்மணியின் மனதைப் புண்படுத்தி விட்டதாக எண்ணி வருந்துகிறார். பிருந்தாவனம் சென்று, அக்பரின் ஓலை குறித்துக் கூறி, போரால் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படும் தீமையை விளக்கி, மீராவை சமாதானப்படுத்துகிறார். மீராவும், இனி தன்னால் ஒரு போதும் போஜராஜனின் மனைவியாகவோ ராணியாகவோ இருக்க இயலாது என்று திட்டவட்டமாக கூறிவிடுகிறார். அதற்கு போஜராஜன் சம்மதித்ததால், அவருடன் மீரா, சித்தோர்கர் (மேவார் நகர்) நகருக்குப் பயணிக்கிறார்.
1521-ல் தில்லி சுல்தானின் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக ராஜபுத்திரர்கள் ஒன்று சேர்ந்து போர் புரிந்தனர். அதில் போஜராஜன் மரணமடைந்தார். கணவரின் இறப்புக்குப் பிறகு, மாமனாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார் மீரா.
மீராவின் கிருஷ்ண பக்தியை விரும்பாத போஜராஜனின் தம்பி விக்ரமாதித்யா, மீராவுக்கு இன்னல்கள் விளைவித்து வந்தார். மீராவின் ஆடல் பாடல்களால், அரச குடும்ப மதிப்புக்கு களங்கம் வரும் என்று எண்ணி, தன் தங்கை உதாபாவுடன் சேர்ந்து கொண்டு மீராவைக் கொல்லத் துணிந்தார் விக்ரமாதித்யா.
கண்ணனுக்கு படைத்த பிரசாதத்தில் நஞ்சைக் கலந்து, அதை மீராவை அருந்தச் செய்தார் விக்ரமாதித்யா. கண்ணன் அருளால் அதில் இருந்து மீண்டார் மீரா. மீராவின் படுக்கையில் இரும்பு முட்களை நிறைத்தார் விக்ரமாதித்யா. கண்ணனின் அருளால் இரும்பு முட்கள் ரோஜா இதழ்களாக மாறின. கண்ணனுக்கு அர்ப்பணிக்க வந்த பூக்கூடையில் கொடிய பாம்பை அடைத்து கொடுத்தார் விக்ரமாதித்யா. ஆனால், பூக்கூடையை மீரா திறந்தபோது, அந்த அரவம் பூமாலையாக மாறியது.
மீராவுக்கு, இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினை எழுந்தது. இந்நிலையில், மீராவின் மாமனார் ராணா சங்கா இயற்கை எய்துகிறார். செய்வதறியாது விழித்த மீரா, கண்ணன் ஒருவனே துணையென சித்தோர்கர் அரண்மணையிலேயே தங்கி வருகிறார்.
இதனிடையே குரு ரவிதாசரிடம் சீடராகிறார் மீரா. எந்நேரமும் கிருஷ்ணனையே நினைத்து வந்த மீரா, அரச குடும்பத்துடன் இருந்த சிறிதளவு பற்றையும் உதறித் தள்ளும் சூழல் உருவாகிறது. அரச குடும்பத்தினர் மீராவை ஆற்றில் குதித்து உயிரைவிட கட்டளை இட்டனர். அவர்கள் கூறியபடி ஆற்றில் குதித்தார் மீரா. ஆனால், கண்ணன் அவர்முன் தோன்றி தனது கரங்களால் அவரை மேலேற்றி, “இன்றோடு உலகபந்தம் உனக்கு அற்றது. உடனே பிருந்தாவனம் வருவாய்” என்று கூறி மறைகிறார்.
இதன்பிறகு பல இடங்களுக்கு கிருஷ்ண சங்கீர்த்தனம் செய்தபடி யாத்திரை செல்லும் மீரா, கண்ணனின் ஆணைப்படி பிருந்தாவனத்தை சென்றடைகிறார். தன்னை அங்குள்ள கோபியருள் ஒருவராகவே நினைத்துக் கொள்கிறார். அங்கிருந்து வட இந்தியா முழுவதும் யாத்திரையாக சென்று, கண்ணன் பாடல்களைப் பாடி மகிழ்கிறார். பக்தி நெறியை தனது பாடல்கள் மூலம் பரப்புகிறார்.
எளிய பக்தியும் நம்பிக்கையும் வீடுபேற்றை அடைய உதவும் என்றும், பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியில் இருந்து அனைவரும் விடுபட்டு பேரின்ப நிலையை அடைய கிருஷ்ண பக்தி அவசியம் என்றும் மக்களிடத்தில் கூறினார் மீரா. இறைவன் முன்னர் அனைவரும் சமம். பிறப்பால் யாரும் உயர்ந்தவர் இல்லை. உயர்வுக்கு காரணம் அவரவர் செயல்தான் என்ற கருத்தை அனைத்து இடங்களிலும் சொன்னபடி இருந்தார்.
1547-ல் குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகைக்கு வந்தடைந்தார் மீரா. அங்கு கோயில் கொண்ட துவாரகாதீசர் (கண்ணன்) முன்பு ராஜஸ்தானி, விரஜ, குஜராத்தி மொழிகளில் பாடி ஆடியபடி, பக்தர்கள் முன்னிலையில் இறைவனோடு ஐக்கியமானார் மீரா.
வைணவ குலத்தில் பிறந்ததால், மீரா, சிறுவயது முதலே கண்ணன் மீது பக்தி கொண்டு சுமார் 1,300 பாடல்களைப் பாடியதாக கூறப்படுகிறது. பாயோஜி மேனே ராம் ரதன் தன், முரளிய பாஜே ரே ஜமுனா கே தீர், மேரே தோ கிரிதர் கோபால் சியாம் சுந்தர் கீ தேக் சாடா போன்ற மீராவின் பஜனை கீர்த்தனைகள் இன்றும் இசைக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன.