குழந்தைமையை அபகரிக்கும் ஆன்லைன் தூண்டில்கள்!- பெற்றோர்களுக்கு விடப்படும் எச்சரிக்கை


எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

பெருந்தொற்று காலச் சவால்களின் பட்டியலில் குழந்தை வளர்ப்பு தொடர்பான புதிய சிக்கல்களும் சேர்ந்திருக்கின்றன. ஆன்லைன் பாடங்கள், வீட்டில் அடைந்திருப்பது என மாறியிருக்கும் புதிய சூழலின் ஊடே புதைமணலும் காத்திருக்கின்றன. அவை தொடர்பாக வெளியாகும் செய்திகள் ஒவ்வொன்றும் அதிர்ச்சியூட்டுபவை. யூடியூப் வீடியோ, ஆன்லைன் விளையாட்டு என கைக்கெட்டும் மெய்நிகர் (விர்ச்சுவல்) உலகின் நிழல் பிரதேசம், நாளைய தலைமுறையைச் சீரழிக்கவே செய்கிறது. அவற்றில் சிக்காது, குழந்தைகளை வழிப்படுத்துவதில் பெரியவர்கள் தெளிவு பெறுவதும் அடங்குகிறது.

தடம்புரண்ட அன்றாடச் செயல்பாடுகள்

பெருந்தொற்றுப் பரவலுக்குச் சற்று முன்புவரை குழந்தைகளின் மெய்நிகர் உலக உபயோகம் கட்டுக்குள் இருந்தது. பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகள் விளையாட்டு, வீட்டுப் பாடம் என்றே பழகியிருந்தார்கள். உணவு முடித்து அதிகபட்சம் அரைமணி நேரம் ஆன்லைனில் சஞ்சரிப்பார்கள். விடுமுறை நாளில் இந்த நேரம் சற்றே அதிகரித்தாலும், பெற்றோர் கண்காணிப்பைக் குழந்தைகள் உணர்ந்தே இருப்பார்கள். தற்போதைய ஆன்லைன் கல்விச் சூழல் அவர்களின் மெய்நிகர் அணுகலை அடியோடு மாற்றியிருக்கிறது. ‘ஜூம்’ போன்ற வீடியோ தொடர்புச் செயலிகளின் உபயோகம், வாட்ஸ்-அப் போன்ற குழுக்களின் தகவல்தொடர்பு போன்றவை ஆன்லைன் வகுப்புகளுக்கு அத்தியாவசியமாகிவிட்டன. வகுப்பு முடிந்தும் பாடம் சார்ந்து ‘சாட்’ செய்வது, குறிப்புதவிக்குத் தேடுவது என இணைய உபயோகம் வரையறையின்றி நீள்கிறது. இந்த அளவுகடந்த பயன்பாடு குழந்தைகளிடமிருந்து குழந்தைமையைப் பறிப்பதுடன், சீரான வளர்ப்பில் தடம்புரளவும் வாய்ப்பாகிறது.

x