அரசுப் பள்ளிகளை நோக்கித் திரும்பும் மக்கள்!- தக்கவைக்க அரசு என்ன செய்யவேண்டும்?


ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

தனியார் பள்ளிகளிலிருந்து விலகி, அரசுப் பள்ளிகளில் சேர்ந்துவரும் மாணவர்களின் எண்ணிக்கை கரோனா காலத்தில் பல மடங்காக அதிகரித்துவருகிறது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. கரோனா பரவல் காரணமாக ஏழை, நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் அரசுப் பள்ளிகளை நோக்கித் திரும்புவதைக் காண்கிறோம். இந்தக் காலகட்டத்தில், பெருநகரங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் அங்கேயே குழந்தைகளைப் படிக்கவைக்க முடிவெடுத்து அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிடுவதும் நடந்துகொண்டிருக்கிறது.
நேரடியாகப் பள்ளிக்குச் சென்று படிக்க முடியாத சூழலில், தனியார் பள்ளிக்கு ஏன் லட்சக்கணக்கில் கொட்டிக்கொடுக்க வேண்டும் என்று யோசிப்பவர்களும் இருக்கிறார்கள். காரணம் எதுவாயினும் அரசுப் பள்ளிகளைத் தேடிவரும் மாணவர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய சவால் அரசின் முன்பு உள்ளது.

அசத்தல் அறிவிப்புகள்

முதல்கட்டமாக, மாற்றுச் சான்றிதழ் இல்லாவிட்டாலும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை மேற்கொள்ளுமாறு அரசு அறிவித்திருப்பது பெற்றோருக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. இதன்மூலம் தனியார் பள்ளிகளின் அதிகார வளையத்திலிருந்து தங்களது குழந்தைகளைப் பெற்றோர் எளிதில் விடுவித்துக்கொள்கின்றனர். அடுத்து, “தமிழ் வழியில் மற்றும் அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதிசெய்யும்” என்று தமிழக அரசு அறிவித்திருப்பதும் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.

x