இனி எல்லாமே ஏ.ஐ - 28: சேவை அமைப்புகளும் செயற்கை நுண்ணறிவும்!


என்ஜிஓ-க்கள் என்று அழைக்கப்படும் தொண்டு நிறுவனங்களையும், அவற்றின் செயல்பாடுகளையும் நீங்கள் அறிந்திருக்கலாம். பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளில் கைகொடுப்பதோடு, சமூக மேம்பாட்டுக்கான நீண்ட காலப் பணிகளிலும் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன. உலகில் பல வகையான தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் செயல்பாடுகளும், சேவைகளும் பல விதமாக அமைகின்றன. எல்லாம் சரி, அனுதினமும் அதிநவீன அம்சங்கள் மனிதர்களைச் சென்றடைந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், நவீனத் தொண்டு நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் முக்கியமான கேள்வி.

தொண்டு நிறுவனங்கள் தங்கள் நோக்கங்களைச் செயல்படுத்த வேகமாக வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்பவையாகஇருக்க வேண்டும் என்பதுதான் இந்தக் கேள்விக்கான பதில். ஆம், வர்த்தகத் துறை, வங்கிகள், வனப் பாதுகாப்பு போன்ற துறைகளில் எல்லாம் செயற்கை நுண்ணறிவு இரண்டற கலந்துவருவது போலவே, தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டிலும் ஏ.ஐ-யின் பயன்பாடுகள் தொடங்கிவிட்டன.

நவீன முகம்

இதையே வேறு விதமாகக் கூறுவதாயின், தொண்டு நிறுவனங்களும், செயற்கை நுண்ணறிவின் தேவையை உணரத் தொடங்கியிருக்கின்றன என்று குறிப்பிடலாம். அல்லது, செயற்கை நுண்ணறிவின் பாய்ச்சலைத் தொண்டு நிறுவனங்களும் உணர்ந்திருப்பதால் அதன் பயன்பாட்டில் பின்தங்கிவிடாமல் இருக்கும் உத்தேசத்துடன் தங்களை மாற்றி அமைத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.

இந்தப் போக்கின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ப தயாராகியிருக்கும் தொண்டு நிறுவனங்கள், ஏ.ஐ திறன் பெற்ற தொண்டு நிறுவனங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. டேட்டா எனும் தரவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கின்ற, தங்கள் சேவைகளைச் சிறந்த முறையில் வழங்க செயற்கை நுண்ணறிவு சார்ந்த அல்கோரிதம்களைப் பயன்படுத்துகின்ற தொண்டு நிறுவனங்களே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. இதுவரை, 30 சதவீதத்துக்கும் குறைவான தொண்டு நிறுவனங்களே செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்கு ஏற்ப அமைந்திருப்பதால், இத்துறை ஏ.ஐ வளர்ச்சிக்கு ஏற்ப இன்னும் ஈடு கொடுத்தாக வேண்டும் எனக் கருதப்படுகிறது. தரவுகளின் முக்கியத்துவத்தை உணர்வதிலிருந்து இந்தப் பயணம் தொடங்குவதாகவும் கருதப்படுகிறது.

நான்கு கட்டங்கள்

தொண்டு நிறுவனங்கள் தங்கள் செயல்திறனையும், சேவைகளையும் மேம்படுத்திக்கொள்ள செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் நான்கு முக்கிய கட்டங்கள் இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். முதல் கட்டம், ‘கண்டறிதல்’ எனச் சொல்லப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு என்ன பலனைத் தரும் என அறிவதாக இது அமைகிறது. செயற்கை நுண்ணறிவு அளிக்கக்கூடிய பலனை முன்மாதிரியாகக் காண்பிப்பது இரண்டாம் கட்டமாக அமைகிறது. இதை ஏ.ஐ எப்படி நிகழ்த்தும் என தீர்மானிப்பது மூன்றாவது கட்டம். நான்காவது கட்டம், தொண்டு நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்கான செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்கிக்கொள்வதாகும்.

தொண்டு நிறுவனங்களுக்குச் செயற்கை நுண்ணறிவு எண்ணற்ற விதங்களில் உதவலாம் என்றாலும், தரவுகளைக் கையாள்வதற்கு எடுத்துக்கொள்ளக்கூடிய நேரத்தைப் பெருமளவில் குறைப்பது இவற்றில் முதன்மையாகக் கருதப்படுகிறது. பொதுவாகவே, புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்களைப் புரிந்துகொள்வதற்கே ஊழியர்கள் கணிசமான நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும். செயற்கை நுண்ணறிவு இவற்றைத் திறம்பட கையாண்டு தேவையான புரிதலை அளித்து, செயல்பாடுகளை வேகமாக்க உதவும்.

களத்தில் கைகொடுக்கும்

அதுமட்டுமல்லாமல், கோப்புகளிலும், ஸ்பிரெட் ஷீட்களிலும் நிறைந்திருக்கும் தரவுகளில் ஒளிந்திருக்கும் தகவல்களைச் சரியாக அடையாளம் காணவும் செயற்கை நுண்ணறிவு கைகொடுக்கிறது. இதன் பயனைக் களத்தில் தெளிவாகப் பார்க்க முடியும்.
உதாரணத்துக்கு, ‘கிரைசிஸ் டெக்ஸ்ட் லைன்’ (Crisis Text Line) எனும் தொண்டு நிறுவனத்தின் நெருக்கடி கால உதவிச் சேவையை எடுத்துக்கொள்வோம். இந்தத் தொண்டு நிறுவனம், தற்கொலை எண்ணம் கொண்டவர்களை மீட்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஆலோசகர்கள் குறுஞ்செய்தி உள்ளிட்டவை மூலம் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இந்த உரையாடல்களில் தற்கொலை எனும் சொல் வரும் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட மாதிரியில் அல்கோரிதமுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான உரையாடல்களை அலசி ஆராயும் இந்த அல்கோரிதம், தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளவர்களைக் கண்டறிந்து சொல்கிறது. மிக வேகமாக அல்கோரிதம் வேலை செய்வதால், தீவிரத் தற்கொலை எண்ணம் கொண்டவர்களைச் சரியான நேரத்தில் தொடர்புகொண்டு உதவ முடிகிறது.

இதே போல மருந்துகளுக்கு எதிரான தன்மை பெறும் கிருமிகள் தொடர்பான நோய்க்கூறு கண்டறிதலை வளம் குறைந்த பகுதிகளுக்கும் அளிக்க, ‘எல்லைகள் இல்லா மருத்துவம்’ (Medicines Sans Frontieres) அமைப்பு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திவருகிறது. ஸ்மார்ட்போன் செயலி மூலம், தொலைதூரப் பகுதிகளிலிருந்து பயனாளிகள் சமர்ப்பிக்கும் புகைப்படத்தை வைத்து செயற்கை நுண்ணறிவு அல்கோரிதம் சரியான பரிந்துரைகளை வழங்குகிறது. மேலும், பொது ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதிலும், செயற்கை நுண்ணறிவின் முக்கிய அங்கமாக இயற்கை மொழியைக் கண்டறியும் ஆற்றல் முக்கியப் பங்காற்றும் என கருதப்படுகிறது.

நவீன நன்கொடையாக்கம்

இவை தவிர, தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு நிதி உதவி அளிப்பவர்களைத் திறம்பட தொடர்பு கொள்வதிலும், பார்வையாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் தகவல்களை அளிப்பதிலும், செயற்கை நுண்ணறிவு பயன்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு நிர்வாகச் சுமைகளையும் பெருமளவு குறைப்பதால், தொண்டு நிறுவனங்கள் தங்கள் சேவைகளில் அதிகக் கவனம் செலுத்த முடிகிறது. உதாரணத்துக்கு, அரட்டை மென்பொருளை உருவாக்கி பயனாளிகள் மற்றும் பங்குதாரர்களுடனான உரையாடலை அதன்வசம் ஒப்படைக்கலாம் என்கின்றனர். இதேபோல நன்கொடையாளர்களைக் கண்டறிவதிலும், நன்கொடை திரட்டுவதிலும் செயற்கை நுண்ணறிவு பேருதவியாக இருக்கிறது என்கின்றனர். நன்கொடை யாக்கத்தில் செயற்கை நுண்ணறிவு எப்படி எல்லாம் கைகொடுத்து வருகிறது என தெரிந்துகொண்டால் இன்னும் வியப்பாக இருக்கும்.

(தொடரும்)

***

ஏ.ஐ காமன்ஸ்

செயற்கை நுண்ணறிவு மூலம் சாத்தியமாகக்கூடிய அனைவருக்குமான நலனை வலியுறுத்துவதற்காக ‘ஏ.ஐ காமன்ஸ்’ (AI Commons) எனும் தொண்டு நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பில், ஏ.ஐ வல்லுநர்கள், தொண்டு நிவனங்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர் உறுப்பினர்களாக உள்ளனர். தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் நலனுக்கான செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்கான வழிகாட்டும் அமைப்பாக இது செயல்படுகிறது. பொதுநலனுக்காக எங்கும், எப்போதும், எப்படி செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்தலாம் என இந்த அமைப்பு ஊக்குவித்து வருகிறது. இதற்கான வரைவுத் திட்டங்களையும் இது அளித்துவருகிறது.

x