வேலூரில் டெபாசிட் இழந்த அதிமுக - ‘முதுகில் குத்திய அதிமுகவினர்’ என்ற சர்ச்சையால் சலசலப்பு


வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக டெபாசிட் இழந்ததற்கு சில நிர்வாகிகள் திட்டமிட்டு தேர்தல் பணியை செய்யாமல் முடங்கியதாக புகார் எழுந்துள்ளது. அதிமுக முதுகில் அதிமுகவினரே குத்திவிட்டதாக தலைமைக்கு ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்படும் என்ற தகவலால் சர்ச்சை எழுந்துள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியின் முடிவுகளில் அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி 1 லட்சத்து 17 ஆயிரத்து 682 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்திருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், வேலூர் சட்டப் பேரவை தொகுதியில் 11,926 வாக்குகள், அணைக்கட்டு தொகுதியில் 20,204 வாக்குகள், கே.வி.குப்பம் தொகுதியில் 18,537 வாக்குகள், குடியாத்தம் தொகுதியில் 21,739 வாக்குகள், ஆம்பூர் தொகுதியில் 18,579 வாக்குகள், வாணியம்பாடி தொகுதியில் 25,611 வாக்குகள் கிடைத்துள்ளன.

இதில், வேலூர் சட்டப்பேரவை தொகுதி வாக்குகள் அதிமுக பரிதாபமான நிலையில் இருப்பதையே காட்டுகிறது. வேலூர் தொகுதியில் அமைக்கப்பட்ட பூத் கமிட்டிகளில் இடம் பெற்றிருந்தவர்களின் எண்ணிக்கை அளவுக்குக்கூட வாக்குகள் வரவில்லை என்பது குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.

யார் துரோகி... விமர்சனம்: மக்களவைத் தேர்தல் தொடங்கியபோது அதிமுக, பாஜக இடையிலான ‘யார் துரோகி’ என்ற விமர்சனம் தேர்தல் களத்தை சூடாக் கியது. கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவில் இருந்த சிலர் தனது முதுகில் குத்திவிட்டார்கள் என பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் எழுப்பிய குற்றச்சாட்டால் அதிமுக, பாஜக இடையிலான தேர்தல் பிரச்சாரம், வாக்குகள் பெறுவதில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன் பிறகு காட்சிகள் மாறிய நிலையில் கொஞ்சம், கொஞ்சமாக அதிமுக தரப்பில் இருந்து தேர்தல் பிரச்சாரம் தொய்வடைய தொடங்கியது. அதிமுக நிர்வாகிகள் சிலர் அதிமுகவுக்கு தேர்தல் வேலை செய்வதை குறைத்துக்கொண்டதாக கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாக பேச தொடங்கினர். இது தேர்தல் முடிவுகளில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

அதிமுக வாக்குகள் எங்கே? - கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 4 லட்சத்து 77 ஆயிரத்து 199 வாக்குகள் பெற்றார். அப்போது, அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதே கூட்டணி 2021-ல் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டது.

இதில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக 5 லட்சத்து 27 ஆயிரத்து 457 வாக்குகளும், அதிமுக 5 லட்சத்து 269 வாக்குகளும் பெற்றன. நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக மட்டும் இடம் பெற்ற நிலையில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக அணியில் பாமக இடம் பெற்றது.

ஏறக்குறைய கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வாங்கிய வாக்குகளையே இந்த முறை அதிமுகவும், பாஜகவும் பங்கிட்டு கொண்டுள்ளன. இந்த வாக்குகளில் அதிமுகவின் பங்களிப்பு குறைந்ததற்கு கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சிலர் காரணம் என தொண்டர்கள் கை காட்டுகின்றனர்.

இதுதொடர்பாக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ‘‘ஆரம்பத்தில் தேர்தல் வேலை சுறுசுறுப்பாக இருந்தது. நாட்கள் செல்ல செல்ல வேகம் குறைய ஆரம்பித்தது. ஒரு சிலர் மாற்று கட்சி வேட்பாளருக்காக அதிமுகவின் தேர்தல் பணியை மழுங்கடிக்க செய்தனர். இது தொடர்பான ரகசிய தகவலை அடுத்து தொகுதி பொறுப்பாளர்களில் ஒருவரான முக்கூர் சுப்பிரமணி ஆய்வு செய்து, கட்சி நிர்வாகிகளை வேலை செய்யுமாறு கூறி விட்டு சென்றார்.

பண பட்டுவாடா: ஆனால், அப்படியும் நிலைமை மாறவில்லை. தேர்தலில் வாக்குகள் குறைந்தது தொடர்பாக தலைமைக்கு ஆதாரங்களுடன் புகார் அனுப்பவுள்ளோம். வேட்பாளரும் தனது பங்குக்கு தலைமைக்கு அறிக்கை அளிக்கவுள்ளார். வேலூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மாற்று வேட்பாளரின் பண பட்டுவாடாவை அதிமுக நிர்வாகிகளே செய்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் எங்கே போய் சொல்வது என்றே தெரிவியவில்லை. அதிமுக முதுகில் அதிமுகவினரே குத்திவிட்டனர்’’ என்றனர்.

இதுகுறித்து, வேலூர் மக்களவை தொகுதி பொறுப்பாளர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியத்திடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, ‘‘தேர்தல் முடிவு தொடர்பாக பொதுச்செயலாளர்தான் முடிவு செய்வார்’’ என முடித்துக்கொண்டார்.