உள்ளாட்சித் தேர்தலில் விட்டதைப் பிடிப்போம்!- திமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் பேட்டி


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

“உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த மாவட்டமான கோவையில் இருப்பதால், இந்த மாவட்டத்தின் ஒரே திமுக எம்எல்ஏ-வான நான்தான் அவரால் அதிகம் பாதிக்கப்படுகிறேன்” என்று கடந்த அதிமுக ஆட்சியில் அடிக்கடி நொந்துகொண்டவர் சிங்காநல்லூர் எம்எல்ஏ-வாக இருந்த நா.கார்த்திக். இம்முறை கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வென்றிருந்தாலும், சிங்காநல்லூரில் ஆளுங்கட்சி எம்எல்ஏ போலவே செயல்பட்டு அதிமுகவினரை அதிரவைக்கிறார் கார்த்திக். எம்எல்ஏ-வாக இருந்தும் எதிர்கட்சியாகப் போராடியவர், எம்எல்ஏ-வாக இல்லாமல் ஆளுங்கட்சிக்காரராகப் பல்வேறு பணிகளைச் செய்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசியதிலிருந்து...

வெற்றி வாய்ப்பை இழந்தாலும், மற்றவர்களைப் போல் சுணங்கிவிடாமல் ஊக்கத்துடன் பணிபுரிகிறீர்களே எப்படி?

அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். திமுகவில் நான் இணைந்தபோது ஏதாவது ஒரு பதவிக்கு வருவேன் என்று எண்ணவில்லை. என் தகப்பனார் திமுககாரர். 1981-ல் நான் 9-வது படிக்கும்போது என்னை சைக்கிள் கேரியரில் உட்கார வைத்துக் கூட்டிச்செல்வார். ஆக, மாணவப் பருவத்திலிருந்தே திமுகவில் இருந்தேன். 1986-ல் இந்தி மொழிதான் இந்தியாவின் ஆட்சிமொழி என்று சட்ட நகலைத் தீயிட்டுக் கொளுத்தியதற்காகத் திமுக தலைவர்களைக் கைது செய்தார்கள். அப்போது எம்ஜிஆர் முதல்வர். சிங்காநல்லூர் ரயில் மறியல் போராட்டத்தில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்ததாக ஒரு பொய் வழக்கு என் மேல் போடப்பட்டு, சிறையில் இருந்தேன். அப்போது திமுகவின் கொள்கை, கலைஞர் மீதான பற்றுதான் என்னுள் நிரம்பியிருந்ததேயொழிய பதவிப் பற்று என்று ஏதுமில்லை.

x