திருச்சி மக்களவை தொகுதியில் எடுபடாத மண்ணின் மைந்தர்கள் கோஷம்!


துரை வைகோ, கருப்பையா, செந்தில்நாதன்

திருச்சி: திருச்சி மக்களவைத் தொகுதியில் பெரும்பாலும் வெளியூரைச் சேர்ந்தவர்களே போட்டியிட்டு வெற்றி பெறுவதால், இங்கு மண்ணின் மைந்தர்கள் கோஷம் எடுபடவில்லை என்ற கருத்து நிலவுகிறது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் 1998 தேர்தலில் சேலம் மாவட்டம் குமாரமங்கலத்தைச் சேர்ந்த அரங்கராஜன் குமாரமங்கலம் பாஜக சார்பில் போட்டியிட்டு மண்ணின் மைந்தரான எல்.அடைக்கலராஜை தோற்கடித்தார்.

தொடர்ந்து, 1999 தேர்தலிலும் அரங்கராஜன் குமாரமங்கலம் வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த தலித் எழில்மலை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2004 தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த மதிமுகவின் எல்.கணேசன் வெற்றி பெற்றார். இதனால், திருச்சி தொகுதி வெளியூர்காரர்களுக்கு அதிர்ஷ்டமான தொகுதி என கருதப்பட்டு வந்தது.

அதன்பின்னர், 2009, 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ப.குமார் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அறந்தாங்கியைச் சேர்ந்த சு.திருநாவுக்கரசர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன்தொடர்ச்சியாக இந்தத் தேர்தலிலும் வெளியூர் வேட்பாளரான துரைவைகோ மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதேநேரம், மண்ணின் மைந்தர்கள் என்ற கோஷத்துடன் களமிறங்கிய அதிமுகவின் கருப்பையா, அமமுகவின் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியின் ராஜேஷ் ஆகியோர் தோல்வியையே தழுவினர்.

தேர்தல் அரசியல் என்பது சமுதாய பலம், சொந்த ஊர்க்காரர் என்ற அபிலாஷைகளை கடந்தது என்பதை ஜனநாயக திருவிழாவில் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருவது திருச்சி தொகுதியில் மீண்டும் ஒருமுறை உறுதியாகி உள்ளது.