கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகானந்தர், இந்தியா மற்றும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை உள்ளடக்கிய பல சொற்பொழிவுகளை ஆற்றியவர். 1893-ல் சுவாமி விவேகானந்தர், சிகாகோவில் உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் அனைவராலும் பாராட்டப்பட்டன.
இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில், ‘காளி கட்டம்’ என்று முன்னர் அழைக்கப்பட்ட கொல்கத்தாவும் ஒன்று. இங்கு உள்ள காளி கோயில் மிகவும் புகழ்பெற்றது. கொல்கத்தாவின் வடக்கு பக்கம் உள்ள சிம்லா மலைப்பகுதியில் காயஸ்த சத்திரிய குலத்தைச் சேர்ந்த ‘தத்தர்’ குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
இந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள் அனைவரும் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கியதோடு மட்டுமல்லாமல், செல்வச் செழிப்பிலும் உயர்ந்து இருந்தார்கள். இவர்கள் ஏழை, எளியோர், இயலாதோருக்கு தயங்காமல் உதவி புரிந்தும் வந்தனர். இத்தகைய குடும்பத்தில் பிறந்த ராம் மோகன் தத்தர், ஆங்கிலேய வழக்கறிஞரிடம் பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவி புவனேஸ்வரி தேவி, ஐந்து குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.