உள்ளாட்சித் தேர்தல் கவனத்துடன் நடக்கட்டும்!


தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை செப்டம்பர் 15-க்குள் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தினால்தான் உள்ளாட்சி நிர்வாகம் தொய்வின்றி நடக்கும் என்பதை உணர்த்தும் தீர்ப்பும்கூட!

தமிழ்நாட்டில் 2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர், பல்வேறு காரணங்களைச் சொல்லி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுவந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. ஒருவழியாக, 2019-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனினும், ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சிகள், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது ஆட்சி மாறியிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு உள்ளாட்சித் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.

மறுபுறம், பெருந்தொற்றுக் காலத்தில் தேர்தல் நடத்தப்படுவதால் தொற்று அதிகமாகப் பரவுவதாக நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டிவருவதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவியதற்குத் தேர்தல் பிரச்சாரமும் ஒரு காரணம் எனச் சொல்லியிருக்கும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி இது தொடர்பான வழக்கை செப்டம்பர் 15-க்குப் பிறகு விசாரிப்பதாகவே சொல்லியிருக்கிறது.

ஆக, உள்ளாட்சித் தேர்தலை இனியும் நீண்ட நாட்களுக்குத் தள்ளிப்போடுவது உசிதமல்ல. இந்தச் சூழலில், தமிழக தேர்தல் ஆணையம் கரோனா காலப் பாடங்களை மனதில் கொண்டு, மிகுந்த கவனத்துடன் இந்தத் தேர்தலை நடத்த வேண்டும். அரசியல் கட்சிகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு தேர்தல் முறைப்படி நடக்க ஒத்துழைக்க வேண்டும்!

x