கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
சந்தனக் கடத்தல் வீரப்பனைக் காட்டில் சந்தித்து நிறைய நேர்காணல்கள் செய்தவர், பத்திரிகையாளர் பெ.சிவசுப்பிரமணியம். கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் கடத்தப்பட்டபோது, அரசுத் தூதுவராகக் காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் பேச்சு நடத்திய அனுபவம் கொண்ட இவர், வீரப்பன் வழக்குகளில் தொடர்புபடுத்தப்பட்டு வருடக்கணக்கில் சிறையில் இருந்தவர். என்கவுன்டரில் வீரப்பன் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் கழித்து, ‘வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்’ என்ற தலைப்பில் நூலை எழுதி நான்கு தொகுதிகளாகச் சமீபத்தில் வெளியிட்டார். சுமார் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த நூலைத் தற்போது ஆங்கிலம், கன்னடம், மலையாளம் மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். இதுகுறித்து சிவசுப்பிரமணியத்துடனான உரையாடலிலிருந்து...
வீரப்பன் இறந்து இத்தனை வருடங்கள் கழித்து அவரைப் பற்றி இவ்வளவு பெரிய நூல் எழுத என்ன அவசியம் வந்தது?
என்னுடன் பேசிய காவல் துறை, வனத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் இதையேதான் கேட்டார்கள். இந்த நூலை அச்சிட நான் அணுகிய பதிப்பகங்களும், இதைத் தொடராக வெளியிட நான் பேசிய பத்திரிகைகளும், “வீரப்பனைப் பற்றி இனி எழுத என்ன இருக்கு?” என்றுதான் கேட்டார்கள். நான் வீரப்பனுடன் 8 ஆண்டுகள் தொடர்பில் இருந்திருந்தாலும், ராஜ்குமார் கடத்தலில் என்ன நடந்தது என்று எங்கேயும் இதுவரை சொல்ல முடியவில்லை. உலகத்தில் அத்தனை பேருமே அந்தக் கடத்தலில் வீரப்பனுக்குப் பணம் பரிமாறப்பட்டதாக நம்புகிறார்கள். அந்த விவகாரத்தில் தூதுவர்களாகச் செயல்பட்ட அனைவரும் அதை மறுக்கிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதிகூட அதைப் பற்றி கருத்து சொல்லவில்லை. ஆனால், இரண்டு அரசுகளிடமும் பணம் வாங்கியதாக வீரப்பன் சொன்னார். ஆக, மக்களை முட்டாளாக்கும் வேலை நடந்திருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் நாம் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது.