கொஞ்சம் அடக்கி வாசிங்க அசோக்குமார்!


கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார். இவரது மனைவி காயத்ரி தான் இப்போது கும்பகோணம் யூனியன் சேர்மன். மனைவியின் அதிகாரத்தை அவ்வப்போது கையில் எடுத்துக்கொள்ளும் அசோக்குமார், அண்மையில் நடந்த கும்பகோணம் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டத்தில் மனைவிக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, “யூனியன் சேர்மனின் ஒப்புதல் பெற்றுத்தான் ஊராட்சிகளில் கட்டிடங்கள் மற்றும் பிளாட்டுகளுக்கு பிளான் அப்ரூவல் கொடுக்க வேண்டும்” என்று சொன்னாராம். இதற்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுகவைச் சேர்ந்த வைஸ் சேர்மன் கணேசனும் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தாராம். இதனால், அந்த இடத்திலேயே அசோக்குமாருக்கும் கணேசனுக்கும் கடும் வாக்குவாதம் முற்றி அங்கிருந்த மற்றவர்களால் சமாதானம் செய்யப்பட்டிருக்கிறார்கள். “திமுகவினர் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் காய்ந்துபோய்க் கிடக்கிறார்கள்” என்ற எதிர்க் கட்சிகளின் விமர்சனத்தை பொய்யாக்க நினைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் அசோக்குமார் போன்றவர்கள், அதை மெய்யாக்கிவிடுவார்கள் போலிருக்கிறது.

x