கேரளத்தைக் கலக்கும் ‘பரோட்டா பொண்ணு’!- சட்ட மாணவியின் தன்னம்பிக்கை வாழ்க்கை


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

தமிழர்கள் என்னதான் பரோட்டா பிரியர்கள் என்றாலும், இங்கு பெரும்பாலும் மாலை நேரங்களில்தான் ஓட்டல்களில் பரோட்டாக்கள் போடப்படும். மலையாளிகளோ பரோட்டா வெறியர்கள். அதனோடு மாட்டிறைச்சியும் வாய்த்துவிட்டால் கேட்கவே வேண்டாம். இதனாலேயே கேரளத்தில் எப்போதுமே பரோட்டா கடைகளின் தணல் அணைவதில்லை!

பரோட்டா போடுவதும்கூட பெரிய கலைதான். அனைவருக்கும் வாய்த்துவிடாது. சுடச்சுட பரோட்டாவை எடுத்ததும் இரு கைகளையும் குவித்து அதை நன்கு அடித்து மிருதுவாக்கவும் தெரிய வேண்டும். இதனிடையே புகை வேறு கண்களைக் குளமாக்கிவிடும். இதெல்லாம் தேர்ந்த ஆண் பரோட்டா மாஸ்டர்களையே படுத்தி எடுத்துவிடும். ஆனால், அதை மிக நேர்த்தியாகச் செய்கிறார் அனஸ்வரா. பரோட்டா மாவைக் கைகளால் தட்டி, ஆகாயத்தில் சுழலவிட்டு அடித்து கல்லில் போடுவதில் ஆண்களையே மிஞ்சுகிறார் இந்த இளம் பெண். தனது அம்மா நடத்தும் சின்னஞ்சிறிய பரோட்டா கடையில் மாஸ்டராக இருக்கும் அனஸ்வரா, சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி என்பது இன்னொரு சிறப்பு!

சபரிமலை ரிசர்வ் வனப்பகுதி கிராமமான குருவான்மூழியில் இருக்கிறது அனஸ்வராவின் வீடு. கான்கிரீட் கற்களால் கட்டப்பட்ட ஓட்டு வீடு அது. எருமேலி செல்லும் வழியில் இருக்கும் அந்த வீட்டின் முன்பகுதியில், மிகச் சிறிய பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது தார்பாலின் ஷீட்களால் உருவாக்கப்பட்ட குடும்ப உணவகம் ‘ஆர்யா’. அங்கு தனது தாய் சுபிக்கு உதவியாகப் பரோட்டா போட்டுக்கொண்டிருந்த அனஸ்வராவிடம் ‘காமதேனு’வுக்காகப் பேசினோம். தமிழ் பத்திரிகையிலிருந்து பேட்டி என்றதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

x