கிட்னி சிஸ்டர்ஸ்!- நட்புக்காக நிகழ்ந்த சிறுநீரகப் பரிமாற்றம்


எஸ்.சுஜாதா
sujatha.s@hindutamil.co.in

அமெரிக்காவின் அட்லான்டா மருத்துவமனையில் பணிபுரியும் சூஸன் எல்லீஸ், டியா விம்புஷ் தோழிகளின் சிறுநீரகக் கொடை குறித்துதான் பலரும் ஆச்சரியத்தோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பார்த்துப் பலருக்கும் சிறுநீரகக் கொடை வழங்க தைரியம் வந்திருக்கிறது. இதன் மூலம் சிறுநீரகத்துக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கானோர், சிறுநீரகக் கொடை பெறும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

சூஸனும் டியாவும் பத்தாண்டுகளுக்கு மேலாக  ஒன்றாக வேலை செய்து வருகிறார்கள். ஆனால், இருவரும் தங்களின் கணவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டதில்லை. அன்று ஓய்வறையில் தன் கணவர் ரோட்னி விம்புஷுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சூஸனிடம் சொன்னார் டியா. சூஸனும் தன் கணவர் லான்ஸ் எல்லீஸும் சிறுநீரகத்துக்காகக் காத்திருப்பதாகச் சொன்னவுடன் இருவருக்கும் ஆச்சரியமாகிவிட்டது.

45 வயது ரோட்னி விம்புஷுக்குத் திடீரென்று ஒருநாள் ரத்தக்கொதிப்பு அதிகமாகி, உடல்நலம் குன்றியது. பரிசோதனையில், சிறுநீரகம் மோசமாக பழுதடைந்துள்ளது தெரிந்தது. ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக அவருக்கு சிறுநீரகக் கொடை கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. லான்ஸ் எல்லீஸுக்கு 2019-லேயே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுவிட்டது. அவரின் அம்மாதான் சிறுநீரகத்தை வழங்கியிருந்தார். ஆனால், தற்போது அந்தச் சிறுநீரகத்தை எல்லீஸின் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஒரு நாளைக்கு 6 மணி நேரம்வரை டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை.

x