சமயம் வளர்த்த சான்றோர் 26: சேஷாத்ரி சுவாமிகள் 


கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தரான ஸ்ரீமத் சேஷாத்ரி சுவாமிகள், தனது நல்வாக்கால் அனைத்து மக்களையும் கவர்ந்தவர். தீயவர்களைச் சாடவும் செய்தவர். பகவான் ரமண மகரிஷியை இந்த உலகுக்கு காட்டியவர். வன்னிமலை சுவாமிகளுக்கு, திருப்புகழ்தான் மந்திரம் என்று உபதேசித்து, அவர் மூலம் திருப்புகழை எங்கும் பரவச் செய்தவர் சேஷாத்ரி சுவாமிகள்.
ஆதிசங்கரர், காஞ்சிபுரத்தில் காமகோடி பீடத்தை அமைத்து, காமாட்சி தேவியை ஸ்ரீவித்யா முறைப்படி வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தார். வழிபாடுகள் சிறப்புற நடைபெற 30 தேவி பக்தர்களையும் நியமனம் செய்தார். வேத சாஸ்திரங்களை நிறைவுறக் கற்றுத் தேர்ந்த இவர்கள் ‘காமகோடி வம்சம்’ என்று அழைக்கப்பட்டார்கள்.

உத்திரமேரூர் அருகே உள்ள வழூர் கிராமத்தில் காமகோடி வம்சத்தைச் சேர்ந்த வரதராஜன் – மரகதம்பாள் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 1870-ம் ஆண்டு ஜனவரி 22-ம் நாள் (தை – அஸ்தம்) சனிக்கிழமை, ஓர் ஆண் குழந்தை பிறந்தது. சனிக்கிழமை திருமாலுக்கு உகந்த தினம் என்பதால், குழந்தைக்கு ‘சேஷாத்ரி’ என்று பெயர் சூட்டப்பட்டது.

சிறுவயதில் இருந்தே சேஷாத்ரிக்கு வேத சாஸ்திரங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. பாட்டனார் காமகோடி சாஸ்திரி அனைத்து மந்திரங்களையும் பேரனுக்குக் கற்றுக் கொடுத்தார். அவராகவே சில சித்து விளையாட்டுகளையும் கற்றுக் கொண்டார்.
ஒருநாள், சேஷாத்ரியின் இல்லம் இருந்த தெருவில் பொம்மை வியாபாரி ஒருவர் வந்தார். அவரிடமிருந்து கிருஷ்ணர் பொம்மை ஒன்றை வாங்கினார் சேஷாத்ரி. அதன்பிறகு அனைத்து பொம்மைகளும் விற்றுத் தீர்ந்தன. அன்றுமுதல் சேஷாத்ரி எந்த வியாபார இடங்கள் வழியாகச் சென்றாலும், தங்கள் கடையில் வியாபாரம் செய்யுமாறு பலர் வேண்டுவதுண்டு. இதனால் சேஷாத்ரிக்கு ‘தங்க கை சேஷாத்ரி சுவாமி’ என்ற பெயர் கிட்டியது.

x