ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
கரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க மனிதர்களுக்கு முகக்கவசமே உயிர்க் கவசமாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட முகக்கவசத்தைப் பயன்படுத்துவதில் மனிதர்கள் காட்டும் அலட்சியத்தால், உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது ஒரு ஜீவன்.
நல்லவேளையாக, முகக்கவசத்தை விழுங்கி அவதிப்பட்ட அந்த வளர்ப்பு நாயைத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் காப்பாற்றியுள்ளனர். சென்னையில், சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் காணொலி ட்விட்டரில் வைரலானது.
நம்மைத் தற்காத்துக்கொள்ள அணியும் முகக்கவசத்தைப் பயன்படுத்திவிட்டு எவ்வாறு அப்புறப்படுத்துகிறோம், நாம் பயன்படுத்தித் தூக்கி எறியும் முகக்கவசம் சுற்றுச்சூழலுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்தாக மாறிவிடுமா என்பன போன்ற கேள்விகளை இந்தச் சம்பவம் எழுப்பியிருக்கிறது.