திருப்பூர்: அனைத்து தொழில் அமைப்புகளும் இணைந்த தொழில் கூட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் தொழில் துறையினரின் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள கே.சுப்பராயனுக்கு பின்னலாடைத் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தி னம் கூறியதாவது: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு ரூ.65 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
தொழில் துறை பிரச்சினைகளை மத்திய அரசிடம் எடுத்துரைக்கும் வகையில், அனைத்து தொழில் அமைப்புகளும் இணைந்து, ஒற்றைக்குடையின் கீழ் தொழில் கூட்டமைப்பை உருவாக்கி, அதன் தலைவராக மக்களவை உறுப்பினர் இருக்க வேண்டும்.
3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி, தொழில் துறையின் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். கூட்டமைப்பில் மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடம்பெறும்போது, மாநில அரசுக்கும் தொழில் துறையினரின் கோரிக்கைகளை தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம். இதனால் திருப்பூரின் எதிர்காலம் மேம்படும்.
ஜவுளி உற்பத்தியில் உலகில் 6-வது இடத்தில் உள்ளோம். வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகள், இந்தியாவில் சந்தைப்படுத்தப்படுகின்றன. இதனால், உற்பத்தி பாதிப்பை நாம் நாள்தோறும் சந்திக்கிறோம். இந்தியாவிலேயே 50 சதவீதத்துக்கும் அதிகமான நூற்பாலைகளை தமிழ்நாடு கொண்டிருந்தது.
இன்று வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு பஞ்சு, நூல் கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 110 லட்சம் பேல் பருத்தி தேவைப்படும் நிலையில், 5 லட்சம் பேல் மட்டும் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. 105 லட்சம் பேல் பல்வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்னலாடைத் தொழிலை பாது காக்க வேண்டிய நெருக்கடியில் நாம் உள்ளோம். மக்கள் பிரதிநிதிகள் இணையும்போது, தொழில்துறையின் கோரிக்கை, நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு உரிய மதிப்பு கிடைக்கும், என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான செலவு அதிகரித்துள்ளது. எனவே, வட்டி சமன்படுத்தும் திட்டத்தில் கூடுதல் சலுகை வழங்க வேண்டும். திருப்பூரின் உள்கட்டமைப்பு, பாலம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டும். கோவை மாநகரில் இருந்து நீலாம்பூர் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
திருப்பூர், கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும். சேலம்- கோவை விரைவு பயணிகள் ரயிலை முறையாக இயக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பான வீட்டு வசதியை ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர் விடுதி உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த எதிர்பார்க்கிறோம், என்றார்.