தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, சொந்த வீட்டுக் கனவில் இருக்கும் ஏழை, நடுத்தர மக்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. கரோனா முதல் அலையின் தொடர்ச்சியாக, வீட்டு மனைகள் விலை உயர்ந்த நிலையில், இப்போது கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பது பலரையும் முடக்கிப்போட்டிருக்கிறது.
சிமென்ட், கம்பி, மணல், பெயின்ட் என எல்லாக் கட்டுமானப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீத விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிற மாநிலங்களை ஒப்பிட, தமிழ்நாட்டில்தான் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் மிக அதிகம் என்பது இன்னும் வேதனை!
கடந்த மாதம் தளர்வுகள் இல்லாத முழு முடக்கம் அமல்படுத்தப்பட்ட கால இடைவெளியில்தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வீடுகள், வணிக நிறுவனங்களைக் கட்டும் பணிகளைத் தொடர முயன்ற பலருக்கும் இந்த விலை உயர்வு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இதில் கட்டுமான நிறுவனத்தினர், கட்டுமானப் பொறியாளர்கள், தொழிலாளர்கள் என எல்லாத் தரப்பினரும் பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.
கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உற்பத்தி விலையை அதிகரிக்காத நிலையில், இந்த விலை உயர்வு ஏன் என்பதுதான் பலரிடமும் இருக்கும் கேள்வி. இந்தச் செயற்கையான விலை உயர்வு குறித்து, அரசியல் கட்சிகள் அரசுக்குச் சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கின்றன. இதற்கென விலை நிர்ணயக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. பெருந்தொற்றுக் காலத்தில் துரித நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழக அரசு இவ்விஷயத்திலும் உரிய கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், இதன் விளைவாக வாடகை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு என அடுத்தடுத்த பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்ளும் சூழல் உருவாகிவிடும்!