ரஜினி சரிதம் 22: ஆறிலிருந்து எழுபது வரை - பாலச்சந்தரின் படத்தை உடைத்த ரஜினி!


மென்மனம் கொண்ட மனிதர்களால் பெரும் சுமைகளைத் தாங்க முடிவதில்லை. அது, துயரமென்றாலும் புகழென்றாலும் இரண்டுமே அவர்களுக்குப் பிரச்சினைதான். ரஜினிக்கும் அப்படித்தான் ஆனது. ரஜினியிடம் கால்ஷீட் வாங்கிவிட்டால் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்று பல்வேறு குறுக்கு வழிகளைப் பின்பற்றி ரஜினிக்கு நெருக்கடிகள் வந்துசேர, வேறு வழியே இல்லாமல் தேதிகளை அவர் அள்ளிக் கொடுத்தார். அதனால், இரவு, பகல் என 24 மணி நேரமும் படப்பிடிப்பில் சிக்கினார் ரஜினி.

பல ஆயிரம் வாட்ஸ் சினிமா விளக்கு வெளிச்சத்தில் நடித்துக்கொண்டேயிருந்ததால், அடிக்கடி ‘டீஹைட்ரேட்’ ஆனார். ஓய்வில்லாமல் போனதில் உடல் தடுமாறியது. ரஜினியின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ந்தவர்களில் ஒருவரான பஞ்சு அருணாசலம் ஒருமுறை ரஜினியிடம், “நடிகனுக்கு உடல்தான் மூலதனம். அதுபற்றிய கவலையில்லாமல் இப்படி இரவு பகலாக சரிவரத் தூங்காமல் எதற்கு நடிக்க வேண்டும் ரஜினி?” என்று கேட்டார். அப்போது அவருடையக் கரங்களைப் பற்றிக்கொண்ட ரஜினி, “கொடுத்த தேதியும் கொடுத்த வாக்கும் சினிமாவில் ஒன்றுதானே சார்... அதைக் காப்பாற்ற வேண்டாமா? தூக்கம் என்ன பெரிய தூக்கம் வேண்டிக் கிடக்கிறது'' என்றார். தயாரிப்பாளர்களின் இயக்குநர்களின், மனதை வருத்தக்கூடாது என நினைத்த ரஜினி, தன்னுடைய உடலை வருத்திக்கொண்டார்.

இன்னொரு பக்கம், ரஜினியே எதிர்பார்க்காத நிலையில், அறிமுகமான அடுத்த ஐந்தே ஆண்டுகளில் அவரை வந்தடைந்த புகழின் கணம், அவரது மனத்தை அழுத்தியது. பள்ளிப் பருவத்தில் பெங்களூரு ராமகிருஷ்ணா மிஷனில், தான் கற்றுக்கொண்ட எளிமைக்கு முரணாக, ‘பெரிய நடிகர்... பெரிய ஸ்டார்... சூப்பர் ஸ்டார்” என்று தனது காதுபடக் கூட்டம் கூடி புகழ்வதை ரஜினியால் ஜீரணிக்கவே முடியவில்லை. ‘அனைவரையும்விட நான் பெரியவன்’ என்கிற எண்ணம் ரஜினிக்கு ஒருபோதும் இருந்ததில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற அடையாளத்தால் ரஜினியால் வீதிகளில் சுதந்திரமாக நடமாட முடியாமல் போனது. புகழை விரும்பிய மனமே இப்போது அதை வெறுத்தது. பணிச்சுமை, புகழ் சுமை இரண்டும் தந்த அழுத்தத்தில் இருந்து விடுபட ரஜினி மது அருந்தத் தொடங்கினார். புகைப் பழக்கம் முன்பைவிட அதிகரித்தது.

இந்த சமயத்தில்தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. நடிகர் திலகத்தின் 200-வது படமான ‘திரிசூலம்’ படத்தின் வெற்றிவிழா பேரணி மதுரையில் 1979, மார்ச் 11-ம் தேதி நடந்தது. அதில் மற்ற நடிகர், நடிகையருடன் கலந்து கொண்ட ரஜினி, நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்புவதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் வெடித்த ரஜினி

விமான நிலையத்தில் ரஜினியை வைத்து ஒரு பிரச்சினை பிரதானமாகப் பேசப்பட்டது. இது தொடர்பாக மார்ச் 13-ல் வெளியான பத்திரிகைகளில், மதுரை விமான நிலையத்தில் இருந்த குளிர்பான கடை ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடை ஊழியரை ரஜினி கன்னத்தில் அறைந்து விட்டதாகவும் அதனால் அங்கே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், கோபமும் பதற்றமுமாக இருந்த ரஜினியை சக நடிகர்கள் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றதாகவும் ஆனால், ரஜினியை விமானத்தில் ஏற்ற அங்கிருந்த அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் செய்தி பதிவானது.

ரஜினியை விமானத்தில் ஏற்ற மறுத்த சமயத்தில், எம்.என்.நம்பியாரும் மேஜர் சுந்தர்ராஜனும் “எங்கள் பொறுப்பில் இவரை அழைத்துச் செல்கிறோம். ஏதாவது பிரச்சினை என்றால் எங்கள் மீதும் நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம்” என்று உறுதிமொழி கொடுத்து அழைத்து வந்திருக்கிறார்கள். விமானத்தில் ரஜினியின் அருகில் எம்.என்.நம்பியார் அமர்ந்துகொண்டார். ரஜினியிடம் பேச்சுக்கொடுத்து, அவரைச் சாந்தப்படுத்தி அழைத்து வந்தார்.

ஆனால், ரஜினியிடம் பதற்றம் குறைந்தபாடில்லை. சென்னை வந்து இறங்கியதும் வடபழனியில் இருந்த விஜயா மருத்துவமனைக்கு ரஜினியை அழைத்துச் சென்றார்கள். அவரை அப்படியே அங்கே விட்டுவிட்டுச் செல்ல மனமில்லாமல் நம்பியார், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ் ஆகிய மூவரும் ரஜினிக்கு அருகிலேயே இரண்டு மணிநேரம் இருந்தார்கள். புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் செரியன் அழைக்கப்பட்டார். ரஜினிக்கு உடனடியாக மனத் தளர்வுக்கான மருந்து கொடுக்கப்பட்டது. ரஜினி தற்காலிகமாகத் தூங்கினார்.

குழந்தையாய் மாறிய ரஜினி

‘நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி! - நர்வ்ஸ் பிரேக் டவுன் பிரச்சினையால் பாதிப்பு’ என்று அப்போது வெளியான செய்திகள் தமிழ் நாட்டையே பரபரப்பாக்கின. திரையுலகில் இவரால் தங்களுடைய வாய்ப்புகள் பறிபோனதாக நினைத்த சில நடிகர்களும், தங்களுடைய படங்களுக்குத் தேதிகள் தராததால் குமைந்துகொண்டிருந்த சில தயாரிப்பாளர்களும் ரஜினியைப் பற்றிய செய்திகளை மிகைப்படுத்தி தூற்றினார்கள். ‘ரஜினியோட ஆட்டம் இத்தோட க்ளோஸ்’என்று வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்கள்.

விஷயம் கேள்விப்பட்டு பெங்களூருவிலிருந்து பறந்து வந்தார் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா. நீண்ட ஓய்வும் சிகிச்சையும் தேவைப்பட்ட ரஜினி, அண்ணனைப் பார்த்து, “உடனே என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்... நான் அங்கிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறேன்” என்றார். தம்பி அப்படிக் கூறியதும் உடனடியாக அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார் சத்யநாராயணா.

அப்போது, சௌகார் ஜானகியின் வீடு, தேனாம்பேட்டையின் செனடாப் சாலையில் இருந்தது. (இன்று அங்கே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், த்ரிஷா, சுதா ரகுநாதன் என பல பிரபலங்கள் வசித்து வருகின்றனர்). சௌகார் ஜானகியின் வீடு அருகில்தான் ரஜினியும் அப்போது வீடு வாங்கியிருந்தார். அந்த வீட்டுக்கு ரஜினி புதுமனைப் புகுவிழா நடத்தியபோது அதற்குச் சென்ற கேபி அசந்துபோய்விட்டார். காரணம், அந்த வீட்டின் வரவேற்பில் கேபியின் பெரிய புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தார் ரஜினி.

சிவாஜி ராவ் எனும் இளைஞன், ரஜினிகாந்த் எனும் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து வருவதை ஒரு தாயின் நெகிழ்வுடனும் ஒரு தந்தைக்குரிய எச்சரிக்கை உணர்வுடனும் கவனித்து வந்த கேபி, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டுப் பதறிப்போனார். ரஜினியைப் பார்க்கப் புறப்படலாம்... ஆனால், தகவல் கொடுக்காமல் போவது சரியாக இருக்குமா என அவர் யோசித்துக்கொண்டிருந்த அந்தத் தருணத்தில் டெலிபதிபோல சத்யநாராயணாவிடமிருந்து கேபிக்கு போன். “சார்... தம்பி ஊசி போட்டுக்கொள்ள மறுக்கிறார். அன்பு கூர்ந்து கொஞ்சம் வீடு வரைக்கும் வந்து அவனை அன்பாக மிரட்டி ஊசிபோட சம்மதிக்க வைக்கவேண்டும். உங்களைத்தான் மலைபோல் நம்பியிருக்கிறேன்” என்றார் சத்யநாராயணா. பதறிப்போன கேபி, செனடாப் சாலை வீட்டுக்கு தான் மட்டும் விரைந்தார். ஓட்டுநரைக் காரிலேயே இருக்கச் சொல்லிவிட்டு வீட்டின் கூடத்துக்குள் நுழைந்தவருக்கு ஷாக்!

அங்கே மாட்டப்பட்டிருந்த கேபியின் படம் இப்போது அங்கே இல்லை. சுவற்றை வெறுமையுடன் பார்த்துக்கொண்டிருந்த கேபியிடம், “என்ன கோபம்ன்னு தெரியல... உங்கப் படத்தை உடைச்சுட்டான்னு நான் இங்க வந்ததும்தான் தெரிந்தது” என்றார் சத்யநாராயணா. “என் படத்தைத்தானே உடைச்சான்... அந்த மாதிரி ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆகும்போது கண்டுக்காம விட்டுடுங்க...” என்று கூலாகச் சொன்னர் கேபி. பக்கத்தில் நின்ற மருத்துவரும் அதையே ஆமோதித்தார்.

“ரஜினியைப் பார்க்கலாமா?” என்று கேபி கேட்டதும் அவரை ரஜினியின் அறைக்கு அழைத்துக் கொண்டுபோனார் சத்யநாராயணா. கேபியைப் பார்த்து ரஜினி எழ முயல... “இரு இரு... ரிலாக்ஸ்டா படுத்திரு” என்று ரஜினியின் கையப் பிடித்துக் கொண்டு வருடிக்கொடுத்தார் கேபி. ரஜினியின் கண்களிலிருந்து கண்ணீர். “எனக்கு எதுக்கு சார்.. ரஜினிகாந்த்னு பேரு வெச்சீங்க..? என்னை எதுக்கு அறிமுகப்படுத்தினீங்க..? என்னால பொறுக்க முடியல சார்..” என்று உடைந்துபோய் கதறினார் ரஜினி. அதைப் பார்த்துவிட்டு கேபியும் அழுதபடி, “எனக்கு இன்னொரு மகன் பொறந்திருந்தா அவனுக்கு வைக்க வேண்டிய பேரைத்தான்பா உனக்கு வெச்சேன்” என்று சொல்ல, சடாரென்று எழுந்து அவரது கால்களைக் கட்டிக்கொண்டு கதறத் தொடங்கிவிட்டார் ரஜினி.

“ஏண்டா.. செல்லம்.. ஊசி போட்டுக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டியாமே... ஏன்?” என்று கேபி கேட்க.. “வலிக்கும்” என்று குழந்தையாய் மாறிச் சொன்னார் ரஜினி. “என்னப்பா சின்னக் குழந்த மாதிரி..? டாக்டர் உள்ள வாங்க... வந்து ஊசியப் போடுங்க. இப்ப என்ன செய்றார்ன்னு பார்க்கிறேன்” என்று கேபி உத்தரவிட்டார். உள்ளே வந்து டாக்டர் ஊசி போட... ரஜினி கன்றுக்குட்டியாக அடங்கிப்போனார். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை, இசைக்கவி கலைமாமணி ரமணனுக்கு தன்னுடைய சரிதையை வாய்மொழியாக விவரிக்கையில் கூறியிருக்கிறார் இயக்குநர் சிகரம் கேபி.

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

x