என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
‘டவுன் சிண்ட்ரோம்’ எனப்படும் சிறப்பு நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் திரைப்படங்களில் நடிப்பது புதிதல்ல. ஊறுகாய் போல் சின்னச் சின்ன காட்சிகளில்தான் அவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். ஆனால், டவுன் சிண்ட்ரோம் குறைபாடு உள்ளவரையே முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு முழு நீளத் திரைப்படத்தை எடுத்து திரும்பிப் பார்க்கவைத்துள்ளது மலையாளத் திரையுலகம்.
ஆம்! மலையாள சினிமாக்களுக்கான ‘நீஸ்ட்ரீம்’ எனும் பிரத்யேக ஓடிடி தளத்தில் வெளியாகி யிருக்கும் ‘திரிக்கி’ படம்தான் இதற்கான புதிய தொடக்கத்தை முன்னெடுத்திருக்கிறது.
இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிகிருஷ்ணன் கே.வர்மா, டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர். கலைத்தாயின் கருணைபெற்ற கோபிகிருஷ்ணன் இப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘முழுநீளத் திரைப்படத்தில், முதன்மைப் பாத்திரம் ஏற்ற முதல் டவுன் சிண்ட்ரோம் நபர்’ என கோபிகிருஷ்ணனை, ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அங்கீகரித்துள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த விமர்சனங்களால் ஏற்கெனவே மகிழ்ச்சியில் இருந்த படக்குழு, இந்த அங்கீகாரத்தால் இன்னும் உற்சாகத்தில் இருக்கிறது. ஓடிடி தளத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.