ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
கல்லூரி மாணவர்களுக்குச் சுதந்திரமான கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன், நேரடிக் கற்றல் முறையுடன் ஆன்லைன் முறையை இணைக்கவிருப்பதாகப் பல்கலைக்கழக மானியக் குழு அண்மையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் இரு சுற்றறிக்கைகளை அனுப்பியிருக்கிறது. இதை அமல்படுத்த, “ஆன்லைன் கல்விக்கு உரிய இணையச் சேவை, ஹார்ட்வேர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் உருவாக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான நிதியைத் திரட்டும் வழிகளைக் கண்டறிய வேண்டும்” என்கிறது அதில் ஒன்று.
புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி இந்தக் கலப்புக் கற்றல் கொள்கையானது முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டாகக் கரோனா காரணமாக இணைய வழியில்தானே பாடங்கள் தட்டுத்தடுமாறி ‘நடந்து? ’ கொண்டிருக்கின்றன. இதென்ன கருத்துக் கேட்புச் சுற்றறிக்கை எனப் பார்த்தால், ‘நடப்பு ஆண்டில் இருந்து அனைத்து இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் உள்ள பாடங்களில் 40 சதவீதத்தை ‘ஸ்வயம்’ (https://swayam.gov.in/) தளத்தில் உள்ள இணையவழிப் படிப்புகள் மூலம் படித்துக்கொள்ளலாம். இதுதவிர, 30 முதல் 70 சதவீத பாடங்களை ஆன்லைன் வகுப்பாகவே கல்லூரி, பல்கலை ஆசிரியர்கள் நடத்தலாம். மீதமுள்ள பாடங்களை மட்டும் நேரடி வகுப்பறையில் மரபு வழியில் நடத்தலாம்’ எனச் சொல்கிறது பல்கலைக்கழக மானியக் குழு. இதற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவன ஆசிரியர் மற்றும் மாணவ அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பிவருகின்றன. அவர்களில் ஒரு சிலருடன் பேசினோம்.
வளர்ந்த நாடுகளே கைவிட்ட திட்டம்