ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்த்ததில் தமிழ்நாட்டின் பங்களிப்பைப் பொருளாதார மேதை அமர்த்ய சென் உள்ளிட்டோர் உலக அரங்கில் பறைசாற்றியுள்ளனர். கல்வியில் முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் ஆண்டுதோறும் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னிலை வகித்தும் வந்திருக்கிறது. இந்நிலையில், 2019-20-ல் பள்ளிக் கல்வித் தரத்தில் பஞ்சாப், சண்டிகருக்கு அடுத்தபடியாகத் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் மாணவர்களின் கற்றல் தரத்தில், 22-வது இடத்தில் பின்தங்கிய நிலையில் தமிழ்நாடு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் தென்னிந்தியாவில் கடைசி மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது இன்னும் வேதனையளிக்கிறது.
தமிழ்நாட்டில் 8-வது படிக்கும் மாணவர்களில் நான்கில் ஒருவருக்கு 2-ம் வகுப்பு பாடங்களை வாசிக்கும் திறனில்லை. 50 சதவீத 8-ம் வகுப்பினருக்கு வகுத்தல் தெரியவில்லை. இதனை ஏசர் (ASER), நாஸ் (NAS) உள்ளிட்ட பள்ளிக் கல்வி குறித்த ஆய்வறிக்கைகள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சுட்டிக்காட்டி வருகின்றன. இந்நிலையில் கல்வியைக் குழந்தைகளுக்குத் திறம்படக் கொண்டு சேர்க்கத் தமிழ்நாடு கல்வித் துறை செய்ய வேண்டியது என்ன?
அண்டை மாநிலங்களுக்கு நாம் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல. என்றபோதிலும், சகோதரத்துவத்துடன் பரிமாறிக்கொள்ள பல திட்டங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றைக் கண்டறியும் முயற்சியில் சிலருடன் உரையாடினோம்.
உலகம் அண்ணாந்து பார்க்கிறது!