இனி எல்லாமே ஏ.ஐ - 25: வனவிலங்குகள் பாதுகாப்பும் வனப்புத்தகமும்


ஏ.ஐ என்பது ஆய்வு நிலையில் இருந்து, அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலக்கத் தொடங்கியிருப்பதை, ஒவ்வொரு துறையாகப் பார்த்துவருகிறோம். இந்தப் பயணத்தில் இப்போது வனத் துறையின் பக்கம் போகலாம். ஆம், மற்ற துறைகள் போலவே வனத் துறையிலும் ஏராளமான வசதிகளை உருவாக்கித் தந்திருக்கிறது ஏ.ஐ. நுட்பம்.

எல்லாம் சரி! கல்வி, சட்டம், வங்கி போன்ற துறைகளில் எல்லாம் ஏ.ஐ. நுட்பம் பயன்படுத்தப்படுவதன் அவசியத்தை இயல்பாகப் புரிந்து கொள்ளலாம். இங்கெல்லாம் எண்களுக்கும், புள்ளிவிவரங்களுக்கும், தரவுகளுக்கும் தேவை இருக்கிறது. எண்கள், தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இயந்திரங்கள் சிந்திக்கின்றன எனும் அடிப்படையையும் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால், கானகத்தில் ஏ.ஐ. நுட்பம் எப்படி பொருந்திவரும் என நீங்கள் நினைக்கலாம். ஏ.ஐ. நுட்பம் தொடாத துறையே இல்லை எனும் தேய்வழக்கான பதிலைக் கடந்து, வனத் துறையில் இந்த நவீன நுட்பம் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

கானகக் காவலன்

வனவிலங்குகள் பாதுகாப்பிலும், குறிப்பாக, அழியும் நிலையில் உள்ள விலங்குகள் பாதுகாப்பிலும் ஏ.ஐ.. நுட்பம் பேருதவியாக இருக்கிறது. அது மட்டும் அல்ல. ஏ.ஐ. நுட்பங்களின் உண்மையான தன்மையையும், அதன் தேவையையும் வனவிலங்குகள் பாதுகாப்பு விஷயத்தில் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். ஏ.ஐ. என்றாலே இயந்திரங்கள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவது அல்லது மனிதர்கள் செய்யும் செயல்களை இயந்திரங்கள் செய்வது எனச் சொல்லப்படுவதை வைத்துக்கொண்டு, இந்த நுட்பத்தை அச்சத்துடனும், மிரட்சியுடனும் நோக்கும் போக்கு பரவலாக இருக்கிறது. எதிர்காலத்தில் மனிதகுலத்தை அடிமைப்படுத்திவிடும் அளவுக்கு ஏ.ஐ. வளர்ந்துவிடும் எனும் நோக்கிலான மிகைக் கருத்துகளுக்கும் இவையே அடிப்படையாக அமைகின்றன. ஆனால், நடைமுறையில் ஏ.ஐ. நுட்பத்தின் தேவை எப்படி இருக்கிறது என்பதை வனவிலங்குகள் பாதுகாப்பில் இதன் பயன்பாடு மூலம் அழகாகப் புரிந்துகொள்ளலாம்.

வனச்செல்வங்களும் சரி, வன விலங்குகளும் சரி, மனிதச் செயல்பாடுகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது நமக்குத் தெரிந்ததுதான். ஒரு பக்கம், வளர்ச்சித் தேவைக்காகக் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன என்றால், சட்டவிரோதமான வேட்டையாடுதல் இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் புலி உள்ளிட்ட வன விலங்குகள் பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்கின்றன. ஆப்பிரிக்காவில் யானைகளும், காண்டாமிருகங்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. அந்தக் கண்டத்தின் அடையாளங்களில் ஒன்றான ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை அபாயகரமாகக் குறைந்திருக்கிறது.

சரணாலயங்கள் அமைத்து வனவிலங்குகளைப் பாதுகாப்பது, வேட்டையாடுதலைக் கட்டுப்படுத்துவது என அரசுகளும், அமைப்புகளும் பலவிதங்களில் வனச்செல்வங்களைப் பாதுகாக்க முயன்று வருகின்றன. இந்த இடத்தில் ஏ.ஐ. கச்சிதமாகப் பொருந்துவதுதான் விஷயம்.

வனப்புத்தகத்தின் வரவு

உதாரணமாக, ஆப்பிரிக்காவில் ஒட்டகச்சிவிங்கி பாதுகாப்பையே எடுத்துக்கொள்வோம். கடந்த 30 ஆண்டுகளில் இந்தக் கண்டத்தில் ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால், ‘ஆப்பிரிக்காவின் கொம்பு’ என வர்ணிக்கப்படும் ஒட்டகச்சிவிங்கியின் குறிப்பிட்ட வகை, அவை அதிகம் காணப்படும் கென்யாவின் வடக்குப் பகுதியில் 70 சதவீதம் குறைந்திருக்கிறது.

இந்த ஒட்டகச்சிவிங்கிகளைப் பாதுகாக்க வேண்டும் எனில், அவற்றின் வாழ்விடங்கள், அந்தப் பகுதிகளில் அவற்றின் நடமாட்டம் ஆகிய விவரங்களைக் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக அவற்றின் எண்ணிக்கை சரியாகத் தெரிய வேண்டும்.
ஆனால், காடுகளில் உள்ள ஒட்டகச்சிவிங்கிகளை எண்ணுவது என்பது மிகவும் சிக்கலான காரியம். வானத்தில் இருந்து வனப்பகுதியை படம் எடுத்து, அந்தப் படங்களில் தென்படும் விலங்குகளைக் கணக்கிடுவதன் மூலம் எண்ணிக்கையை அறியலாம் என்றாலும், அது செலவு மிகுந்த, நேரமெடுக்கும் வழிதான். நூற்றுக்கணக்கான படங்களை வைத்துக்கொண்டு ஒட்டகச்சிவிங்கிகளை எண்ணிக்கொண்டிருக்க வேண்டும் என்றால் யோசித்துப் பாருங்கள். இதற்கு முன் இப்படித்தான் செய்துகொண்டிருந்தனர். ஆனால், இப்போது இந்தப் பணியை வனப்புத்தகத்திடம் (Wildbook) ஒப்படைத்து விடுகின்றனர்.

படங்கள் மூலம் அடையாளம்

அதென்ன வனப்புத்தகம்? இது ஒரு மென்பொருள் அமைப்பு. அமெரிக்காவில் உள்ள வனவிலங்குகள் பாதுகாப்பு நிறுவனமான ‘வைல்டு மீ’ (Wild Me) இதை உருவாக்கியிருக்கிறது. வனங்களில் எடுக்கப்பட்ட படங்களை இந்த மென்பொருளிடம் கொடுத்தால் போதும். அவற்றில் காணப்படும் ஒட்டகச்சிவிங்கிகளை அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையையும் கச்சிதமாகச் சொல்லிவிடும். அதிலும் மிக விரைவாக இந்தக் கணக்கை அளிக்கிறது வனப்புத்தகம்.

ஒட்டகச்சிவிங்கிகளைப் பார்த்ததும் அடையாளம் காண்பது மனிதர்களுக்கு எளிதானதுதான் என்றாலும், தோற்றத்தை வைத்து ஒட்டகச்சிவிங்கிகளை வேறுபடுத்திப் பார்ப்பது என்பது பெரும் சவாலாக இருக்கலாம். அதிலும் நூற்றுக்கணக்கான படங்களில் உள்ளவற்றை அடையாளம் காண்பது குதிரைக் கொம்பாகிவிடலாம். ஆனால், ஏ.ஐ. மென்பொருளோ, ஒட்டகச்சிவிங்கிகளின் கோடுகள் அமைப்பு மற்றும் காதுகளின் வடிவம் உள்ளிட்ட அம்சங்களை வைத்து அவற்றை அடையாளம் கண்டு, கணக்கிட்டும் சொல்லிவிடுகிறது. ‘கம்ப்யூட்டர் விஷன்’ எனும் நுட்பம் இதற்குப் பின்னால் செயல்படுகிறது.

இதற்கு முன்னர், விலங்குகளைக் கணக்கெடுப்ப தெல்லாம் வார இறுதி நாட்களில் முடிக்கும் பணியாக இருக்கவில்லை. ஆனால் இப்போது, இதை உடனடியாகச் செய்துவிட முடிகிறது என வியந்துபோகின்றனர் வனவிலங்குப் பாதுகாவலர்கள்.

ஒட்டகச்சிவிங்கி என்றில்லை, சிங்கம், வரிக்குதிரை, சிறுத்தை என எல்லா வகையான விலங்குகளையும் கேமரா வழியே ஏ.ஐ. துணை கொண்டு கண்காணிப்பது எளிதாகி இருக்கிறது. அதேநேரத்தில் இந்த விலங்குகளைச் சட்டவிரோதமாக வேட்டையாடுபவர்கள் மீதும் ஒரு கண் வைத்திருப்பது சாத்தியமாகிறது. வனவிலங்குப் பாதுகாப்பில் ஏ.ஐ. பயன்பாட்டை இன்னும் விரிவாகத் தொடர்ந்து பார்க்கலாம்.

(தொடரும்)

நீங்களும் கண்காணிக்கலாம்

வனவிலங்கு பாதுகாப்பில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், ஜிராஃப்ஸ்பாட்டர் (https://giraffespotter.org/) இணையதளத்துக்கு விஜயம் செய்யுங்கள். ஆப்பிரிக்க ஒட்டகச்சிவிங்கிகள் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளம் இது. வனப்புத்தகத்தின் மென்பொருள் மூலம் சேகரிக்கப்பட்ட ஒட்டகச்சிவிங்கி தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தில், கென்யா காடுகளில் ஒட்டகச்சிவிங்கிகளைப் பார்ப்பவர்கள் அதைப் படமெடுத்து இருப்பிட விவரத்துடன் இந்தத் தளத்தில் பகிர்ந்துகொள்ளலாம். இந்த ஒட்டகச்சிவிங்கி, ஏற்கெனவே பட்டியலிடப்பட்டதா அல்லது புதியதா என்பதை ஏ.ஐ. மென்பொருள் கண்டறிந்து சொல்லும். இந்த முறையில், ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கையைச் சரியாக அறிந்துகொள்ளலாம்!

x