கரு.முத்து
muthu.k@kamadenu.in
தேர்தலுக்கு முன்பு அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக அறிவித்த சசிகலா, அதிமுகவின் தோல்விக்குப் பிறகு கட்சித் தொண்டர்களிடம் அலைபேசி வழியாக தினமும் உரையாட ஆரம்பித்திருக்கிறார். அப்படித்தான் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தனிடமும் சசிகலா அலைபேசியில் பேசினார். அப்போது இருவருமே பழைய நினைவுகளை அசைபோட்டவாறு உருக்கமாகப் பேசினார்கள். “நீங்கள்தான் கட்சியைக் காப்பாற்ற வேண்டும்” என்று ஆனந்தன் தழுதழுக்க, “நிச்சயம் வருவேன், தலைவர் இருந்தபோதும், அம்மா இருந்தபோதும் கட்சி எப்படி இருந்ததோ அப்படி கொண்டுவந்துவிடலாம்” என்று சசிகலா உறுதியளித்தார்.
உளுந்தூர்பேட்டை அருகிலிருக்கும் நத்தாமூரைச் சேர்ந்த எம்.ஆனந்தன், 1972 முதலே அதிமுகவில் இருப்பவர். 1984-ல் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரானவர். ஜெயலலிதா அணியின் சார்பில் 1989-ல் சேவல் சின்னத்தில் போட்டியிட்டவர். 1991-ல் ஜெயலலிதா அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத் துறை மற்றும் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர். 2009-ல் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். கட்சியிலும் அமைப்புச் செயலாளர், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்திருக்கிறார்.
1986-ல் மதுரையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் இவரது திருமணத்தை எம்ஜிஆர் நடத்திவைத்தார். ஜெயலலிதா இவரது மகனுக்கு மருத்துவம் படிக்க இடம் ஒதுக்கித் தந்தார். 49 ஆண்டு காலமாகத் தொடர்ந்து அதிமுகவில் இருக்கும் ஆனந்தனுக்கு இப்போது கட்சியில் எந்த முக்கியத்துவமும் இல்லை. சென்னையில் அமைதியாக வசித்துவருகிறார்.
சசிகலாவுடனான உரையாடல், அதற்கான அவசியம் ஆகியவை குறித்து ஆனந்தனிடம் அலைபேசி வழியாகப் பேசினோம். “சின்னம்மாகிட்ட பேசுனதுல ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். கட்சியைப் பற்றி மனசுக்குள்ள பெரிய நம்பிக்கையே வந்திருக்கு” என்று ஆனந்தமாகப் பேசத் தொடங்கினார் ஆனந்தன்.