ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
உடனடி காபித் தூள், 2 நிமிடங்களில் தயாராகும் நூடுல்ஸ் என ‘அப்படியே சாப்பிடலாம்’ வகையறா உணவுப் பண்டங்கள் பெரும்பாலோர் வீட்டுச் சமையலறையில் வரிசை கட்டுகின்றன. இத்தகைய உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான நெஸ்லே, தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் மேகி நூடுல்ஸ், ஐஸ்கிரீம், கிட்கேட் போன்ற இனிப்பு வகைகள் உள்ளிட்டவை உடலுக்கு ஆபத்தானவை என்கிற அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
ஆரோக்கியமில்லா 60 சதவீத உணவுகள்
தனது முக்கிய உணவு மற்றும் பானம் தயாரிப்புகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை அங்கீகரிக்கப்பட்ட ஆரோக்கிய வரையறையைப் பூர்த்தி செய்யவில்லை என்பதையும், சில பிரிவுகள் மற்றும் தயாரிப்புகள் எவ்வளவு புதுப்பித்தாலும் ஒருபோதும் ஆரோக்கியமாக இருக்காது என்பதையும் தனது ஆராய்ச்சி குறித்த ஆவணத்தில் நெஸ்லே நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது. 2021 தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்நிறுவனத்தின் உணவு மற்றும் பானங்களில் 37 சதவீத தயாரிப்புகள் மட்டுமே ஆஸ்திரேலியாவின் உணவு நட்சத்திர மதிப்பீட்டு முறையின்கீழ் 3.5 -க்கும் அதிகமான மதிப்பீட்டைப் பெற்றன. நெஸ்லே தயாரிக்கும் குழந்தைகளுக்கான உணவு, செல்லப் பிராணிகளுக்கான உணவு, காபி ஆகியவை இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது இதில் கவனிக்க வேண்டியது.