கரு.முத்து
muthu.k@kamadenu.in
கொடுந்தொற்றுக் கால சோகங்களுக்கு இடையே, ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் விஷயங்களும் ஒருபக்கம் தொடரத்தான் செய்கின்றன. நாகையைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் புத்தநேசன் தனது பணியை ராஜினாமா செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணப்பயன்கள் அனைத்தையும் முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துவிடுமாறு கோரியிருப்பது அவற்றில் மிக முக்கியமானது.
நாகூர் அருகேயுள்ள தெத்தியில் வசிக்கும் 54 வயதான புத்தநேசன், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் நெடுங்குளத்தில் உள்ள ஆதிதிராவிடர் மேனிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிகிறார். 67 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் பெற்றுவந்த இவருக்கு இன்னும் ஆறாண்டுகள் பணி மீதமிருக்கிறது. இந்த நிலையில்தான் சமீபத்தில் நாகை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தன்னுடைய பணியை ராஜினாமா செய்யும் முடிவைத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஆதிதிராவிட நலத் துறை இயக்குநருக்கும் முறைப்படி கடிதம் அனுப்பிவிட்டு காத்திருக்கும் புத்தநேசனிடம் பேசினோம்.
“இது பேரிடர் காலம். சொல்ல முடியாத அளவுக்குச் சோகங்கள் மக்களைச் சூழ்ந்திருக்கின்றன. சாமானியர்கள் மட்டுமல்லாமல் செல்வாக்கு மிக்க மனிதர்கள்கூட இந்த நோயால் இறக்கிறார்கள். அவர்களின் இறுதிச்சடங்கைக்கூட நடத்த முடியாத நிலைமையைப் பார்க்கிறோம். இதையெல்லாம் பார்த்தபோது, இந்தத் தருணத்தில் சமூகத்துக்கு ஏதாவது ஒருவகையில் எனது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.