கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in
நாம சங்கீர்த்தனத்தின் முன்னோடிகளுள் முக்கியமானவர் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர். தனது தனதான்ய சொத்துகள் அனைத்தையும் பிறருக்கு கொடுத்துவிட்டு, வாழ்நாள் முழுவதும் சிவநாமம் துதித்து, பல இடங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று தனது பஜனைப் பாடல்கள் மூலம் நாம சங்கீர்த்தனத்தை அனைவரும் கேட்கும்படி செய்த மகான் அவர்.
மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக லிங்கராயர் என்ற அந்தணர் இருந்துவந்தார். அவருக்கு மகனாக 1635-ம்
ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி பிறந்தவர் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர். சிறுவயது முதலே சிவபக்தராகத் திகழ்ந்த ஸ்ரீதர வேங்கடேச தீட்சிதர், வேத, சாஸ்திர சம்பிரதாயங்களை கற்றுத் தேர்ந்தார். இசை நுணுக்கங்களையும் கற்றறிந்தார். லட்சுமி என்ற நங்கையை மணந்தார்.
தீட்சிதரின் தந்தை இறைவனடி சேர்ந்த பின்னர், மைசூர் சமஸ்தானத்தில் திவானாக ஆகும் வாய்ப்பு, தீட்சிதருக்கு கிட்டியது. தனது சொத்துகள், பெயர், புகழ், பதவி ஆகியவற்றில் ஆர்வம் இல்லாத தீட்சிதர், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. மனைவி லட்சுமி மற்றும் தனது தாயுடன், பல இடங்களுக்குச் சென்று, புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி, அனைத்து இடங்களிலும் இறைநாமம் கூறுவதையே அவர் விரும்பினார்.