ஹாட் லீக்ஸ்: உதறிய ஸ்டாலின்... பதறிய துர்கா ஸ்டாலின்!


கார்த்திக்கு அழகிரியின் அடுத்த செக்

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்திலேயே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும் ப.சிதம்பரம் தரப்புக்கும் மோதல் வெடித்தது. சட்டமன்றத் தேர்தலின்போது இது இன்னும் பலமாக எதிரொலித்தது. கூடுதலாக, சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக இருந்த கே.ஆர்.ராமசாமியும் அழகிரியுடன் கைகோத்துக் கொண்டார். இந்த நிலையில் இந்த மோதலானது கார்த்தி சிதம்பரம் - கே.ஆர்.ராமசாமி நேரடி மோதலாக உருமாறியது. இந்த யுத்தம் ராமசாமியின் கோட்டையான தேவகோட்டையில் கார்த்தி சிதம்பரத்தின் விசுவாசிகள் போட்டிக் கூட்டம் நடத்துமளவுக்கு வளர்ந்து நிற்கும் நிலையில், அடுத்த கட்டமாக தேவகோட்டை நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரை மாற்றும் முடிவில் இருந்தார் கார்த்தி சிதம்பரம். இதற்கு செக் வைக்கும் விதமாக கே.ஆர்.ராமசாமியை காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவராக நியமிக்க வைத்துவிட்டார் அழகிரி. இனி கார்த்தி தரப்பு ஏதாவது கொடியைத் தூக்கிப் பிடித்தால் ராமசாமி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களைக் கட்டம்கட்டவும் தயங்கமாட்டார் என்கிறார்கள்.

தூங்கும் துணைவேந்தர்கள் நியமன ஃபைல்கள்!

நாடு முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் 20 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பதவி காலியாக இருக்கிறதாம். துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைகள் பட்டியலில், பழம்பெருமை வாய்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளிட்டவையும் உள்ளன. வழக்கமாக இந்த துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தை மத்திய கல்வி அமைச்சகமே கலந்தாலோசித்து முடிவெடுத்து விடும். ஆனால் இந்தமுறை, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளை பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு ரகசியமாக அனுப்பி வைத்திருக்கிறார்களாம். அந்தக் கோப்புகள் பிரதமர் அலுவலகத்தில் காத்துக் கிடப்பதால் துணைவேந்தர்கள் நியமனங்களும் காலதாமதமாகிறதாம். துணைவேந்தர் இல்லாத பல்கலைக் கழகங்களில் திருவாரூர் மத்திய பல்கலைக் கழகமும் ஒன்று என்பது கூடுதல் தகவல்.

x