ரஜினி சரிதம் 21: ஆறிலிருந்து எழுபது வரை- ரஜினியை கைது செய்த போலீஸ்!


வியாபார நன்மை கருதி இனி இணைந்து நடிப்பதில்லை என்று கமலும் ரஜினியும் பேசி முடிவெடுத்த பிறகு, இருவருடைய ரசிகர்களும் ஏங்கித்தான் போனார்கள். காரணம், இருவரும் இணைந்து நடித்த படங்களில் இருந்த வசீகரம் தனித்துவமானது.

கமல் – ரஜினி இணையில் இருந்த ஈர்ப்புத் தன்மை வேறு எந்த நடிகர்களுக்கும் இல்லவே இல்லை. ஒரே ஃபிரேமில், கமலும் ரஜினியும் இடம்பெறும் காட்சிகளில் இருவருமே போட்டி போட்டு நடித்தார்கள். ரசிகர்கள் மனதளவில் இரு குழுவாகப் பிரிந்து இந்தப் போட்டியை வெகுவாக ரசித்தார்கள். ஆனால், பிரிந்த பிறகு இந்த அபூர்வ இணையை அவர்கள் இழந்தார்கள். இருவரும் போட்டியாளர்கள் ஆன பிறகு, தத்தமது தனித்துவ பாணிகள் வழியாக திறமையை முழுமையாக வெளிப்படுத்தி தங்களுக்கென தனித் தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்டார்கள். இதனால், இவர்களை வைத்து தமிழ் சினிமாவில் வியாபாரம் செழித்தது.

நடிகர் திலகத்தின் விரல் பிடித்து...

 எண்பதுகளின் இறுதி அது. கமலும் ரஜினியும் தங்களுக்கான தனிச் சந்தையை உருவாக்கிக்கொண்டுவிட்ட நேரத்தில், நடிகர் திலகம் சிவாஜியின் படங்களும் வசூலில் குறைவைக்கவில்லை. தன்னுடைய மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள, தேவி, ப்ரியா போன்ற இளம் கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து அசத்திக் கொண்டிருந்தார் நடிகர் திலகம். இளம் கதாநாயகிகள் மட்டுமல்ல... வளர்ந்து நின்ற இளம் கதாநாயகர்களையும் இணைத்துக்கொண்டு, ‘மல்டி ஸ்டாரர்’ உத்தியைக் கையாளத் தொடங்கினார் சிவாஜி. அப்படி அவர், ‘ப்ரியா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் வெள்ளி விழா நாயகனாக மாறியிருந்த ரஜினியை தன்னுடன் முதன் முதலாக இணைத்துக்கொண்ட படம்தான் ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’.

அதில் சிவாஜியின் மகனாக ரஜினி நடித்தார். சிவாஜியின் பிற்காலப் படங்களின் கதை உருவாக்கத்தில் அவருக்கு ஆஸ்தான கதாசிரியர்களில் ஒருவராக விளங்கிய ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் கதை, வசனம் எழுத, யோகானந்த் இயக்க, வாலியின் வரிகளுக்கு எம்எஸ்வி இசையமைக்க என்று எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்தப் படம் பெரிய வெற்றியைப்பெறவில்லை.

ஆனால், ரஜினிக்கு அதில் வருத்தமில்லை. யாரைப் பார்த்து நடிக்க விரும்பி சினிமாவுக்கு வந்தோமோ அவரே அழைத்து, “என்னுடன்நடிப்பீங்களா தம்பி..?” என்று உரிமையுடன் கேட்டது ரஜினியை நெகிழ வைத்தது. அந்தப் படத்தின் படப்பின்போது, “டேய் செல்லம்... 60 வயசு கிழவனா நடிக்கப் போறியாமே... ஒரு நடிகன் இப்படித்தான் இருக்கணும். நான் 30 வயசுல எப்படியிருந்தேனோ அதே துடிப்போடே இருக்கேடா ராஸ்கல்’’ என்று ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தின் அறிவிப்பைப் பார்த்து ரஜினியை அழைத்து உச்சி முகர்ந்தார் சிவாஜி. ரஜினியை அவர் தனது மகன்களில் ஒருவராகவே மனதில் வரித்துக் கொண்டார்.

கைதும் விடுதலையும்

1979-ம் வருடம் மார்ச் முதல் நாள். ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படப்பிடிப்பில் திடீரென்று மயங்கி விழுந்தார் ரஜினி. மின்னல் வேகத்தில் செட்டுக்கு அழைத்து வரப்பட்டார் ஏவிஎம் நிறுவனத்தின் மருத்துவர். ரஜினியைப் பரிசோதித்தபின், “ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்குறீங்க?” என்று கேட்டார் மருத்துவர். “2 மணி நேரம்... பிரேக்ல குட்டித் தூக்கம்” என்றார் ரஜினி. “இது நல்லதுக்கில்ல மிஸ்டர் ரஜினி. உடனடியா நீங்க ஒரு நாளாவது முழு ஓய்வு எடுக்கணும். தினமும் 6 மணி நேரமாவது நல்லா தூங்கணும். வாரத்துல ஒரு நாள் மட்டுமாவது 12 மணி நேரம் தூங்க முடியுமா பாருங்க... இல்லேன்னா சிக்கலாகிடும்” என்று அறிவுறுத்திச் சென்றார். டாக்டர் சொன்னதைக் கேட்டு பதறிய இயக்குநர் எஸ்பிஎம்மும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலமும் படப்பிடிப்பை ரத்து செய்து ரஜினியை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், முழுநாள் கூட ஓய்வு எடுக்க முடியாமல், அடுத்தநாளே ‘தாய் மீது சத்தியம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் ரஜினி.

படப்பிடிப்பு முடிந்து மாலை 5 மணி அளவில் கோடம்பாக்கம் என்.எஸ்.கிருஷ்ணன் சாலையில் காரில் வந்துகொண்டிருந்தபோது, “உங்களைத் தாக்கி எழுதுறாரே ஒரு நிருபர்... அதோ போறார் பாருங்க” என்றார் ரஜினியின் உதவியாளர். காரை ஓட்டிக் கொண்டிருந்த ரஜினி அந்த நிருபரை வழிமறித்து காரை நிறுத்திவிட்டு சட்டென்று கிழே இறங்கி, “மிஸ்டர் ரிப்போர்ட்டர்...” என்று சற்று உரத்த குரலில் அழைத்தார்.

அவ்வளவுதான் ரஜினியைப் பார்த்த அந்த நிருபர் ஒரே ஓட்டமாக மிரண்டு ஓடினார். ஆளைப் பார்த்தும் ‘உனக்கு என்னதான்யா வேணும்?’ என்று கேட்க முடியாமல் போய்விட்டதே என்கிற வருத்தம் ரஜினிக்கு.

ரஜினியைப் பின் தொடர்ந்து சென்று அவரைக் கண்காணித்து தாக்கி எழுதிவந்த அந்த நிருபர், சர்ச்சை செய்திகளை திரட்டிக்கொண்டு வருவதில் கில்லாடி. முன்னணி பத்திரிகை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அவரைச் சந்திக்க வேண்டும் என்று உதவியாளரை அனுப்பி பலமுறை ரஜினி முயற்சித்தும் சந்திக்க மறுத்துவிட்டார் அந்த நிருபர். கோடம்பாக்கத்தின் எந்த ஸ்டுடியோவில் ரஜினி படத்தின் படப்பிடிப்பு நடந்தாலும், மாறுவேடத்தில் அங்கே ஆஜராகிவிடுவார் அந்த நிருபர்.

ஒரு கட்டத்தில், வெறுத்துப்போன ரஜினி, அந்தப் பத்திரிகையின் உரிமையாளருக்கே புகார் அளித்துவிடலாமா என்று நண்பர்களிடம் கேட்டார். ஆனால், வேண்டாம் என்று ரஜினியின் நண்பர்கள் தடுத்துவிட்டனர். ஆனாலும் அந்த நிருபரால் ரஜினிக்கு ஏற்பட்டிருந்த மன உளைச்சல் காரணமாக மற்ற பத்திரிகைகளின் நிருபர்களையும் சந்திக்காமல் தவிர்க்கத் தொடங்கினார். அந்த சமயத்தில், “ஒரேயடியாக நிருபர்களை ஒதுக்கவேண்டாம்” என்று ரஜினிக்கு அறிவுறுத்தினார் இயக்குநர் எஸ்பிஎம்.

அந்தச் சமயத்தில்தான் வழியில் அந்த நிருபரைப் பார்த்து அருகில் காரை நிறுத்தப்போய்... “ரஜினி என் மீது காரை மோதி தாக்க முயற்சித்தார்” என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டார் அந்த நிருபர். இதனால் ரஜினியை கைது செய்த போலீஸார், அடுத்த அரை மணி நேரத்தில் அவரை ஜாமீனில் விடுவித்தனர். இது 1979, மார்ச் 8-ல் வெளியான பத்திரிகைகளில் பரபரப்புச் செய்தியானது. தகவலை அறிந்த சிவாஜி ரஜினிக்கு போன் செய்து அன்போடு விசாரித்தார். “நாம வளரும்போது பலபேரோட வயிறு எரியும்... அந்த நெருப்புல பொறாமைப்படுறவன் பொசுங்கட்டும்... நாம கொதிச்சுடக் கூடாது. நானும் இதையெல்லாம் கடந்து வந்தவன்தான்பா” என்று அக்கறையுடன் அறிவுரை சொன்னார் சிவாஜி.

பிதாமகனுடன் பெரும் பயணம்

‘ஜஸ்டிஸ் கோபிநாத்’, படம் சுமாராகப் போனாலும் அடுத்து நடிகர் திலகத்துடன் ரஜினி இணைந்த ‘நான் வாழவைப்பேன்’ மாபெரும் வெற்றிப் படமானது. 

ஆர்.சி.சக்தி இயக்கிய அந்தப் படத்தில், சிவாஜியைக் காப்பாற்ற உயிர்த் தியாகம் செய்யும் எதிர்மறைக் கதாபாத்திரம் ரஜினிக்கு. முதல் பிரதி திரையிடலில் ரஜினியின் நடிப்பைப் பார்த்துவிட்டு, “இந்தப் படத்தில் நீ தான் மக்கள் மனசுல நிப்பேன்னு ஆரூரான்கிட்ட (கதை, வசன கர்த்தா ஆரூர்தாஸ்) சொன்னேன். கேரக்டருக்கு என்ன தேவையோ அந்த நடிப்பைக் கொடுத்துருக்கே... படம் நல்லா வந்திருக்கு. எனக்கு அதுதான் வேணும்” என்று சிவாஜி மனதார ரஜினியைப் பாராட்டினார். அவரின் காலில் விழுந்து வணங்கி பாராட்டை ஏற்றுக்கொண்டார் ரஜினி.

இந்தியாவே வியந்துகொண்டிருக்கும் பெரிய நடிப்பாளுமையிடமிருந்து பாராட்டு அத்தனை எளிதாக கிடைத்துவிடுமா? அதை மனதில் இருத்திக்கொண்ட ரஜினி, ‘விடுதலை’யில் சிவாஜியை பெருமைப்படுத்தினார். பின்னாளில் ‘படிக்காதவன்’ படத்தில் சகோதர பாசத்தை இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பொழிந்தார்கள். படிக்காதவனில் அண்ணனும் தம்பியுமாக வரும் காட்சிகளில் இருவருமே கண்களிலேயே பாசத்தை வழியவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்கள். ‘ஒருகூட்டு கிளியாக' பாடல், இன்றைக்கும் நடிகர் திலத்தின் தனிப்பட்ட தந்தைமை இயல்புக்கும், ரஜினி என்கிற உணர்ச்சிப் பிழம்பு மனிதனின் அன்புக்கும் இளையராஜாவின் இசை அர்ப்பணிப்பாகவே நிலைபெற்றுவிட்டது.

அதேபோல் ‘படையப்பா’வில் இருவரும் தந்தை மகனாக வாழ்ந்தார்கள். அந்தப் படத்தில் ரஜினி வீட்டைவிட்டு வெளியேறும் காட்சியில், நடிகர் திலகம், “போப்பா… இனிமேல் நாங்க எல்லாருமே உன் பின்னாடிதான்” என ஒரு வசனத்தை மனமுருகிப் பேசுவார். அதற்கு எதிர்வினையாக, “என்னைக்குமே எங்க எல்லாருக்கும் நீங்கதான்ப்பா முன்னோடி" எனக் கூறுவார் ரஜினி.

சிவாஜி மீதும் அவரது குடும்பத்தின் மீதும் ரஜினி வைத்திருக்கும் பற்றுதல் இன்று வரைக்கும் மாறவில்லை. அதற்கு அடையாளம், சிவாஜி புரடெக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் அவர் தொடர்ந்து நடித்தது. ‘விடுதலை’ படத்தில் ‘நாட்டுக்குள்ள நம்மப் பத்திக் கேட்டுப் பாருங்க... அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க...’ என்று சிவாஜிக்கு தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பாடலாக்கி அணி சூட்டினார் ரஜினி.

அப்படிப்பட்ட ரஜினியைப் புரட்டிப்போட்டது சிவாஜியின் 200-வது படமான ‘திரிசூலம்’ படத்தின் வெற்றிவிழா. இந்த விழாவுக்காக கோலிவுட் நட்சத்திரங்கள் புடைசூழ மதுரையில் மாபெரும் பேரணி நடந்தபோது,சிவாஜியின் அழைப்பை ஏற்று அதில் கலந்து கொண்டார் ரஜினி. அப்போது மேடையில் சிவாஜியின் காலில் விழுந்து ஆசிபெற்றார் ரஜினி. அந்த விழா முடிந்து சென்னை திரும்ப மதுரை விமான நிலையம் வந்தபோது ரஜினி எனும் எரிமலை வெடித்தது...

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

x