தெலங்கானாவில் தடம்பதிக்கும் ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளா!- விரிவடையுமா ராஜண்ணா ராஜ்ஜியம்?


எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

“சிங்கம் இப்புடு சிங்கிள் கானே வஸ்துண்டி” என மேடைதோறும் ஒய்.எஸ்.ஷர்மிளா உதிர்க்கும் ரஜினி பஞ்ச் டயலாக்குக்குக் கரகோஷம் அள்ளுகிறது. உண்மைதான். ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டியும் அவரது சகோதரி ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளாவும், ஒரே காட்டின் இரு சிங்கங்களாக இதுவரை உள்ளுக்குள் உறுமிக்கொண்டிருந்தார்கள். தற்போது தங்கை சிங்கம் தனக்கான தனி வனாந்திரமாக, தெலங்கானாவில் புதிய கட்சியைத் தொடங்க இருக்கிறது. ஷர்மிளாவின் புதிய புறப்பாட்டில், ஏற்கெனவே உரசலில் இருக்கும் ஆந்திர- தெலங்கானா மாநிலங்களின் அரசியலில் காரம் கூடியிருக்கிறது.

ராஜண்ணாவின் வாரிசுகள்

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வராக இருமுறை அலங்கரித்தவர் ‘ராஜண்ணா’ என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. இரண்டாம் முறை முதல்வரான சில மாதங்களில் ஹெலிகாப்டர் விபத்தொன்றில் அவர் அகால மரணமடைய, ஆந்திராவே கதறியது. அப்போது ஒய்.எஸ்.ஆர் குடும்பத்தினர் மீதான ஆந்திர மக்களின் அபிமானத்தைப் புறந்தள்ளிய காங்கிரஸ் தலைமை, அவரது அரசியல் வாரிசுகளாகக் களத்திலிருந்த மனைவி விஜயம்மா, மகன் ஜெகன்மோகன், மகள் ஷர்மிளா என எவரையும் அரவணைக்க மறுத்தது. அவர்களைச் சீண்டும் விதமாய் ரோசய்யா, கிரண் குமார் ரெட்டி என அடுத்தகட்ட தலைவர்களை ஆந்திர முதல்வராக்கியது. இது ஒய்.எஸ்.ஆருக்கு இழைக்கப்பட்ட துரோகம் என அவரது ஆதரவாளர்கள் பொங்கினார்கள்.

x