குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவோம்!


கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் மே மாதத்தில் அதிகமான குழந்தைத் திருமணங்கள் நடந்திருப்பதாகக் குழந்தைகள் உரிமைகளுக்கான தொண்டு நிறுவனமான ‘சைல்டு ரைட்ஸ் அண்ட் யூ’ (க்ரை) தெரிவித்திருக்கிறது. பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், இதுகுறித்த தகவல்களை முழுமையாகச் சேகரிப்பதும் சவாலான விஷயமாக இருந்ததும் தெரிய வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் முகூர்த்த தினங்கள் அதிகம் கொண்ட மாதங்களில் இந்தப் போக்கு அதிகரித்திருப்பது இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை என்பதை உணர்த்துகிறது.

கடந்த ஆண்டு, கரோனா பொதுமுடக்கத்தின்போது, மே மாதத்தில் மட்டும் 318 குழந்தைத் திருமணங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக, சேலம், தருமபுரி, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன. கரோனா முடக்கத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் கல்வியைத் தொடர்வதில் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்களில் சிலர் திருமண வயதுக்கு முன்பே கட்டாயமாக மணவாழ்க்கையில் தள்ளப்படுகின்றனர். குழந்தைத் திருமணங்களின் காரணமாக, பேறுகாலத்தில் தாய்-சேய் இறப்பு முதல், பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தின்மை என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

விவரமறியாத வயதில் இந்த விபரீதங்களை இளம் பிள்ளைகள் எதிர்கொள்வது ஜீரணிக்க முடியாத கொடுமை.

அடுத்து வரும் ஜூன், ஜூலை, செப்டம்பர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் முகூர்த்த நாட்கள் அதிகம். இதையும் மனதில் கொண்டு தீவிரக் கண்காணிப்பையும், உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை. குறிப்பாக, குழந்தைத் திருமணங்களுக்கு வழிவகுக்கும் வறுமை, அறியாமை உள்ளிட்ட சமூகக் காரணிகளுக்குத் தீர்வு காண்பதும், இது தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றோர் மனதில் விதைப்பதும் இந்த நேரத்தில் மிகவும் அவசியமான ஒன்று!

x