கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in
தனது அனுபவத்தின் மூலமாக உணர்ந்த, ‘இறைவன் ஒருவரே’ என்பதையும் ‘வழிபாட்டு முறைகள் அனைத்தும் இறைவனை அடைவதற்கான பல வழிகள்’ என்பதையும் அனைவருக்கும் தெளிவுபடுத்தியவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். ஆன்மிக ஞான ஒளியாகத் திகழ்ந்து வேதாந்தத் தத்துவங்களை அனைவருக்கும் போதித்தவர் அவர்.
உலக நன்மைக்காகவும் ஆன்ம விடுதலைக்காகவும் துறவறம் ஏற்ற ஸ்ரீராமகிருஷ்ணர், இந்தியாவில் வாழ்ந்த ஒப்பற்ற மனித தெய்வம் என்று அழைக்கப்படுகிறார். வங்காள மாநிலத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் தேரேய்பூர் (கமார்புகூர்) என்ற கிராமத்தில் வைணவ குலத்தைச் சேர்ந்த சுதிராம் - சந்திராமணி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ராம்குமார், காத்யாயனி, ராமேஸ்வர் என மூன்று குழந்தைகள். தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, கடுமையாக உழைத்து பெரும் செல்வம் ஈட்டிய சுதிராம், ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் உதவி செய்வதில் ஆர்வம் காட்டினார். புனித தலங்களுக்குச் சென்று நீராடி வழிபடுவதிலும் அதிக நாட்டம் கொண்டிருந்தார். போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்திலும், அனைத்துத் தலங்களுக்கும் நடந்தே சென்றார். அப்படிச் சென்றபோது சிறிது காலம் ராமேஸ்வரத்தில் தங்கியிருந்து தினமும் ராமபிரானை தரிசித்து பின்னர் ஊர் திரும்பினார்.
ஊர் திரும்பியதும் சில பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார் சுதிராம். இறைவனின் கருணையால் அதில் இருந்து மீண்டு வந்தார். இறங்கு முகத்தில் இருந்த அவரது வாழ்க்கை ஏறுமுகம் கண்டது. தினமும் பூக்களைப் பறித்து இறைவனுக்கு சூட்டி மகிழும் சுதிராம், அந்தப் பூக்களைப் பறித்துக் கொடுப்பதில் சீதா பிராட்டி எட்டு வயது குழந்தையாக வந்து தனக்கு உதவுவதாக உணர்வார்.
இந்நிலையில், 1835-ல் மீண்டும் தீர்த்த யாத்திரை புறப்பட்ட சுதிராம், பல புண்ணிய தலங்களில் நீராடிவிட்டு கயா வந்தடைந்தார். கயாவில் முன்னோருக்கான சடங்குகளை செய்துவிட்டு, கதாதரர் என்னும் நாமம் கொண்ட விஷ்ணு கோயிலுக்குச் சென்று வணங்கினார். அன்று இரவு அவரது கனவில், தோன்றிய திருமால், தானே அவருக்கு ஒரு மகனாகப் பிறக்கவிருப்பதாகத் தெரிவிக்கிறார். இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த சுதிராம், உடனே தனது இல்லத்துக்கு புறப்படுகிறார்.