கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
முன்னாள் அமைச்சர்களில் பலர் இருக்கிற இடம் தெரியாமல் அமைதிகாக்கும் சூழலிலும், தினமும் ஒரு ஊரில் கபசுர குடிநீர் வழங்கி மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் முன்னாள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். புதிய ஆட்சி பொறுப்பேற்று 20 நாட்கள்தான் ஆகிறது என்று கருணை காட்டாமல், கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்கிறார். அவருடன் ‘காமதேனு' இதழுக்காக பேசினோம்.
முன்னாள் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக இன்றைய அரசின் கரோனா தடுப்புப் பணிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
புதிய அரசு கரோனாவை எதிர்த்துப் போராடுகிறது. ஆனால், அது மக்களுக்குப் பலனளிக்கவில்லை. பரிசோதனை செய்தவர்களுக்கு ரிசல்ட் வரவே தாமதமாகிறது. இதனால் தொற்று அடையாளம் காணும் முன்பே பலர் பலியாகிறார்கள். மருத்துவமனையில் இடம் கிடைப்பதில்லை. மருத்துவமனைக்குப் போக ஆம்புலன்ஸ் கிடைப்பதில்லை. இடம் கிடைத்தால் படுக்கை, உணவு, ஆக்ஸிஜன் என்று போன்ற வசதிகளுக்குப் பற்றாக்குறை. தினமும் வெறுமனே ஒரு லட்சம் டெஸ்ட் தான் எடுக்கிறார்கள். நாங்கள் அதிகபட்சமாக 3 லட்சம் டெஸ்ட் கூட எடுத்தோம். இத்தனைக்கும் அது பரிசோதனைக் கருவிகளுக்குத் தட்டுப்பாடு இருந்த காலம்.