டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து 234 புதிய எம்எல்ஏ-க்கள் பதவியேற்கும் போதெல்லாம், 235-வது எம்எல்ஏ-வாக ஆங்கிலோ இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்பதைப் பார்த்திருப்பீர்கள். தமிழகச் சட்டப்பேரவையில் 69 ஆண்டுகளாக நீடித்துவந்த இந்த வழக்கம், புதிதாக அமைந்திருக்கும் ஆட்சியில் இல்லை என்பதைக் கவனித்தீர்களா? ஏன் ஆங்கிலோ இந்திய உறுப்பினரின் நியமனம் நிறுத்தப்பட்டது... என்ன காரணம்?
தொடக்கம்
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாடு முழுவதும் ஆங்கிலோ இந்தியர்கள் சமூகத்தினர் கணிசமாக வாழ்ந்துவந்தார்கள். நாடு புதிதாகக் கட்டமைக்கப்பட்டபோது, ஆங்கிலோ இந்தியர்களின் பங்களிப்பும் இருந்தது. எனவே, அந்தச் சமூகத்தினரின் குறைகள், கருத்துகள், ஆலோசனைகளை மத்திய - மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் மத்தியில் இருந்தது. அதற்காக நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் ஆங்கிலோ இந்தியர் பிரதிநிதித்துவம் என்ற பெயரில் நியமன எம்பி-க்கள், எம்எல்ஏ-க்களை நியமிக்கலாம் என்று அரசமைப்புச் சட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.