வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in
அந்தாதிப் பாடல்களில் கடைசியில் இடம்பெறும் வார்த்தை, அடுத்த பாடலின் தொடக்க வார்த்தையாக இருக்கும். இந்த முறையில் அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதியில் நூறு பாடல்கள் உள்ளன. தினம் ஒரு அந்தாதிப் பாடலைப் பக்தர்களுக்கு அறிமுகம் செய்யும் அரிய பணியைச் செய்துவருகிறது, நெய்வேலி ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் ஆலயம். பக்தியோடு, சமூகச் சூழல், தத்துவ விளக்கம், நன்னெறி போன்ற சீர்திருத்தக் கருத்துகளுடன் அபிராமியின் புகழை நேர்த்தியான சொற்பொழிவு அனுபவத்துடன் தினம் தினம் அளித்துவருகிறார் சுதா பழமலை.
இந்த இக்கட்டான கரோனா தொற்று காலத்தில் நாம் இறுகப் பற்ற வேண்டியது இறை நம்பிக்கையைத்தான் என்பதை, தினம் தினம் ஆணித்தரமாக நம் மனதில் பதியவைக்கிறது சுதா பழமலையின் சொற்பொழிவு உத்தி.
ஞானத்தையும் நல்வித்தையையும் பெற, பிரிந்தவர் ஒன்று சேர, எவரிடமும் சொல்ல முடியாத மனக் கவலைகள் தீர… என நம் வாழ்க்கையில் ஒவ்வொரு தடையையும் நீக்கவும், பற்றுகளை நீக்கவும் நமக்கு அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதியின் பாடல்கள் எப்படி உதவுகின்றன என்பதைத் தெளிந்த நீரோடையாய் தனது ஒவ்வொரு சொற்பொழிவிலும் விளக்குகிறார் சுதா பழமலை.