பெருந்தொற்று பீதியைப் போக்கும் இணையவழி கிளினிக்!- கரோனா காலத்தில் கைகொடுக்கும் மருத்துவர்கள்


ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

நோயைவிடவும் கொடியது நோய் குறித்த அச்சம். இருமல், தும்மல், காய்ச்சல் வந்துவிட்டாலே கரோனா பெருந்தொற்று நம்மையும் பீடித்துக்கொண்டுவிட்டதோ என்கிற அச்சத்தில் உடல் நடுநடுங்கி மூச்சிரைத்துப் போகிறவர்கள் இருக்கிறார்கள். பலர் கரோனா வந்த பிறகும், ‘அதெல்லாம் நமக்கு வராது’ என்று அலட்சியமாகச் சுற்றித் திரிந்து பலருக்குப் பரப்பும் நோய் கடத்திகளாகிவிடுகிறார்கள். முதற்கட்டமாக மருத்துவ சோதனையும் ஆலோசனையும் வழங்கக்கூடியவர்கள் கிடைத்துவிட்டாலே தொற்று முற்றிப்போவதையும் அநாவசியமான பதற்றத்தால் வேறு விதங்களில் பாதிப்புக்கு உள்ளாவதையும் தடுத்துவிட முடியும். நல்லெண்ண அடிப்படையில் இதைச் செயல்படுத்தி வருகிறது ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை வழங்கும் ‘சுவஸ்த் சர்க்கிள்’ திட்டம். நாம் வீட்டில் இருந்தபடியே நோய் தொடர்பான அச்சத்திலிருந்து விடுபடவும் உரிய மருத்துவ ஆலோசனை பெறவும் உதவும் திட்டம் இது.

கரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொதுமுடக்கம் அமலான சமயத்திலேயே இத்திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையின் எலும்பியல் நிபுணரான டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை. பெருந்தொற்று பரவ ஆரம்பித்ததும் கரோனாவைத் தவிர இதர நோய்க்கூறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை கிடைக்காமல் போனது. இதனால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற நோய்களின் தாக்கம் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ உதவி புரியவே இதைத் தொடங்கியதாகச் சொல்கிறார் டாக்டர் பிரகாஷ்.

12 ஆயிரம் பேருக்கு இலவச ஆலோசனை

x