தன்னம்பிக்‘கை’ வக்கீல்!- எளியோருக்கு உதவிடும் மகிழ்வண்ணன்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

மகிழ்வண்ணனை யதேச்சையாகச் சாலையில் எதிர்கொண்டால், ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டு விடுவோம். விபத்து ஒன்றில் தன் வலது கையை இழந்தவர் டூ வீலரையும், காரையும் இடது கையாலேயே லாவகமாக ஓட்டிச்செல்லும் பாங்கு நமக்கு வியப்பூட்டும். திருநெல்வேலி நீதித் துறை நடுவர் நீதிமன்றம் எண் நான்கில், அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞராக இருக்கும் மகிழ்வண்ணனோடு பேசினாலே தன்னம்பிக்கை ஜிவ்வென்று ஏறுகிறது.

நீதிமன்ற விடுமுறை நாட்களில் சொந்த ஊரான குமரிக்கு வருபவர், தன் நண்பர்கள் படையைத் திரட்டிக்கொண்டு அரசுப் பள்ளிகளைச் சுத்தப்படுத்துவது, சாலையோரம் கிடக்கும் குப்பைகளை அகற்றுவது, கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவது என ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டுவருகிறார் மகிழ்வண்ணன். கரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது சுற்றுவட்டார கிராம மக்களுக்கு நண்பர்களோடு சேர்ந்து உணவும், தேவையான பொருட்களும் வழங்கிய இவர், கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகிவரும் இந்தச் சூழலிலும் தன் சேவையைத் தொடர்கிறார்.  

தனது சேவை மீது அதிகமாக விளம்பர வெளிச்சம் பாய்ச்சிக் கொள்ளாத மகிழ்வண்ணனைச் சந்தித்துப் பேசினோம். ‘‘குமரி மாவட்டத்தின் வெள்ளமோடிவிளை எனது ஊர். குழந்தைப் பருவத்திலேயே அப்பா இறந்துட்டார். எனக்கு மூணு அக்கா, ஒரு அண்ணன். அப்பாவோட இறப்புக்குப் பின்னாடி வீட்டில் ரொம்ப பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுருச்சு. அம்மா தான் வேலைக்குப் போய் எங்களை வளர்த்தாங்க. அண்ணனும், அக்காக்களும் படிப்பைப் பாதியிலேயே விட்டுட்டு வேலைக்குப் போய்ட்டாங்க. நானும் அஞ்சாம் கிளாஸ் படிக்கிறப்பவே லீவு நாள்களில், அம்மாவோட தும்பு ஆலை வேலைக்குப் போவேன். அப்படி ஒரு நாள் வேலைக்குப் போயிருந்தப்போ, மிஷினில் என் கைமாட்டி பயங்கர விபத்தாகிடுச்சு. ஆஸ்பத்திரியில் கண்முழிச்சு பார்த்தப்போ என்னோட வலது கையை முழுசா அகற்றிட்டாங்க.

x