எஸ்.சுஜாதா
sujatha.s@hindutamil.co.in
கரோனா பெருந்தொற்றுடன் உலகமே போராடிக்கொண்டிருக்க, ஆர்பாட்டமில்லாமல் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறார் அன்னா ரூதர்ஃபோர்ட். ஆம், 344 கிலோமீட்டர் தூரத்தை மூன்று நாட்களுக்குள் கடந்து புதிய சாதனையைப் நிகழ்த்தியிருக்கிறார் அன்னா!
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 38 வயது அன்னா ரூதர்ஃபோர்ட், வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். கரோனா பொதுமுடக்க காலத்தையும் தன்னுடைய பிரசவ விடுமுறையையும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்த இவர், குழந்தை பிறக்கும் வரை தினமும் ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டு வந்தார். குழந்தை பிறந்து இரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும் பயிற்சியைத் தொடர்ந்தார்.
ஸ்காட்லாந்தின் மிக நீண்ட ஓடு பாதை சதர்ன் அப்லேண்ட் வே. 344 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தப் பாதையைச் சாதாரணமானவர்கள் கடக்க 2 வாரங்கள் தேவைப்படும். 2020 டிசம்பரில் ஓட்ட வீரரும் நண்பருமான ஜாக், இந்தப் பாதையில் ஓடி சாதனை படைத்தார். அவருக்கு அன்னாவின் கணவர் நெய்ல் உதவி செய்தார். அப்போதுதான் அன்னாவுக்குத் தன்னாலும் ஓட முடியும் என்ற நம்பிக்கை வந்தது. ஆனால், குழந்தை பிறந்த பிறகு அதே அளவுக்கு உடலிலும் மனதிலும் வலு இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனாலும் திருமணம் ஆகி, குழந்தைகளைப் பெற்ற பிறகும்கூட ஒரு பெண்ணால் தான் நினைப்பதைச் செய்ய முடியும் என்று காட்ட வேண்டும் என்ற எண்ணம் அவரை உந்தித் தள்ளியது.