கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
ஆட்சி மாறியதும், காட்சிகள் மாறுவது இயல்புதான். ஆனால், மு.க.ஸ்டாலின் முதல்வரானதிலிருந்து அடுத்தடுத்து அரங்கேறிக் கொண்டிருக்கும் சில காட்சிகள், இது தமிழ்நாடு தானா என்று பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
திமுக, அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொல்லுமளவுக்கு இரு ஆட்சிகளுக்கும் பொதுவான அம்சங்கள் எப்போதுமுண்டு. ஒன்று எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாகப் பாவிப்பது. அடுத்தது, தங்களுக்கு ஜால்ரா போடும் அதிகாரிகளை மிகப்பெரிய பொறுப்புக்கு கொண்டுவருவதுடன், முந்தைய ஆட்சிக்கு ஜால்ரா அடித்தவர்களை உப்புசப்பு இல்லாத துறைக்கு மாற்றுவது. தேர்தல் பிரச்சார நேரத்தில் பூ முகத்தையும், வெற்றிபெற்று அரியணையில் அமர்ந்ததும் சிங்க முகத்தையும் காட்டுவதும் ஆட்சியாளர்களுக்கு வழக்கமான ஒன்று. ஆனால், நான் அப்படியில்லை என்று தனது செயல்பாடுகள் மூலம் காட்டுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கடந்த முறை திமுக 90 சீட்களுக்கு மேல் ஜெயித்தும்கூட, ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற விழாவில், சரத்குமார் போன்றோருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கிவிட்டு மு.க.ஸ்டாலினை பின்வரிசையில் உட்கார வைத்தார்கள். ஆனால், மு.க.ஸ்டாலினோ தன்னுடைய பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த எதிர்க்கட்சியினரையும் உரிய மரியாதையுடன் நடத்த வழிகாட்டல்களை வழங்கியிருந்தார். ஆளுநர் அளித்த தேநீர் விருந்திலும், ஓபிஎஸ், தனபால் போன்றோருடன் ஒரே மேஜையில் அமர்ந்து பங்கேற்றார் முதல்வர்.