தமிழகத்தில் கரோனா பாதிப்புகள் உச்சமடைந்திருக்கும் சூழலில், புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் திமுக அரசு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. நேற்று வரை ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவும் ஆக்கபூர்வமான யோசனைகளை வழங்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க அரசு மேலும் முன்வர வேண்டும். கரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை, ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்படுகின்றன. அதேசமயம், தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மிகுந்த அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். எனவே, மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியமும் உருவாகியிருக்கிறது.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 850 பேர் பயிற்சி மருத்துவர்களாகப் பணியாற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். தற்போது, ஆண்டுக்கு சுமார் 250 பேர் மட்டுமே ஹவுஸ் சர்ஜன் பயிற்சிக்குச் சேர்க்கப்
படுகின்றனர். இந்நிலையில், மீதமுள்ள சுமார் 600 இளம் மருத்துவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாகப் பணியாற்ற அரசு வாய்ப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவர் முதல்வராக இருந்த காலத்திலேயே மருத்துவ சங்கங்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைதான் என்றாலும், இப்போது பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அதை அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது நல்ல விஷயம். 40 ஆயிரம் ரூபாய் ஊதியத்துடன் சென்னையில் கரோனா தடுப்புப் பணியை மேற்கொள்ள இறுதி ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு, சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்திருக்கும் சூழலில், தமிழக அரசும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு உரிய ஊதியத்துடன் தமிழக மருத்துவமனைகளில் பணிபுரிய வாய்ப்பளிக்க வேண்டும். கூட்டு முயற்சிதான் இதுபோன்ற பேரிடர்களிலிருந்து மீண்டுவர கைகொடுக்கும் என்பதையும் தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும்!