வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in
புதிய பாடகர்களை அடையாளம் காண்பதற்கான குரல் தேடல் நிகழ்ச்சி ஏறக்குறைய எல்லா டிவி சேனல்களிலும் நடக்கிறது. அதில் ஒரு சேனலின் நிகழ்ச்சியில் கானா பாடகர்கள், சொல்லிசைக் கலைஞர்கள், வள்ளி திருமணம் நாடகத்தில் பாடுபவர்கள் எனப் பலதரப்பட்ட கலைஞர்களுக்கும் மேடை அளித்திருப்பது பாராட்டத்தக்க விஷயம். இவர்களில் சொல்லிசைக் கலைஞர் அய்யனார் மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு முன்னறிவிப்பின்றி பொதுமுடக்கத்தை அரசு அமல்படுத்தியதைத் தொடர்ந்து உருவான துயரச் சூழலைச் சொல்லும் பாடலை அன்றைக்கே பாடியவர் அய்யனார். அப்போது என்.கே.டி எனும் பெயரில், பாடகர் ‘காதல்’ ஜாக்கோடு இணைந்து அய்யனார் பாடிய சொல்லிசைப் பாடல் இன்றைக்கும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து பலரால் பார்க்கப்பட்டு வருகிறது.
“உழைப்பைத்தான் நான் நம்பினேன்... வைரஸால் நான் பின்னால் சென்றேன்…” எனும் வரிகள், அன்றாடம் வேலை செய்தால்தான் உணவு என்று இருப்பவர்களின் பரிதாப நிலையை விளக்குகின்றன. இன்றைக்கு விளிம்புநிலை மக்களுக்கான அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகி உள்ளன. அறிவிக்கப்படும் திட்டங்கள் எல்லாம் இந்த மக்களை அடையும் முன்பாகவே ஆவியாகிவிடுவதன் மர்மத்தை, ஆட்சியாளர்கள் ஓட்டுக்காகவே இவர்களை உயிரோடு வைத்திருக்கும் அவலத்தை வலியோடும் வலுவோடும் தோலுரித்துக் காட்டுகின்றன பாடலின் வரிகள். திரைப்பட இயக்குநர் ராஜு முருகனின் வழிகாட்டலில் செயல்படும் ‘காம்ரேட் டாக்கீஸ்’ யூடியூப் சேனல் இந்தப் பாடலை வெளியிட்டிருக்கிறது.
“இந்தியாவிலேயே உடல் உழைப்பை நம்பி வாழும் பெரும் மக்கள் திரளைக் கொண்டது மும்பையின் தாராவி குடிசைப் பகுதி. அந்த இடத்திலிருந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து எழுதிப் பாடிவரும் சொல்லிசைக் கலைஞர்களான என்.கே.டி, காதல் ஜாக் ஆகியோரைக் கொண்டே இந்தப் பாடலைப் பாடவைத்து வெளியிடுவது என்று முடிவு செய்தோம். இதையடுத்து, இந்தியா முழுக்க வாழும் உழைக்கும் மக்களின் குரலாக ஒரு பாடலை உருவாக்க முடிவெடுத்தோம். அவர்கள் இருக்கும் பகுதியிலேயே அவர்களைப் பாடவைத்து, அங்கேயே படப்பிடிப்பை நடத்தி அதை எங்கள் சேனலில் வெளியிட்டிருக்கிறோம்” என்கிறார் காம்ரேட் டாக்கீஸின் மதன்.