அரியணையைத் தக்கவைத்துக்கொண்ட பாஜக!- அசாம் தேர்தல்: ஒரு பார்வை


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

அசாமில் பாஜகவே மீண்டும் வென்று ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறிய ஆரூடம் பலித்துவிட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி பெற்று அரியணையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 75 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கிறது. இதில், பாஜகவுக்கு 60 இடங்கள், அசாம் கண பரிஷத் (ஏஜிபி) கட்சிக்கு 9 இடங்கள், ஐக்கிய மக்கள் கட்சி (லிபரல்) கட்சிக்கு 6 இடங்கள் கிடைத்திருக்கின்றன.

இம்முறை எப்படியேனும் வென்றுவிட வேண்டும் என்று போராடித் தோற்றுப்போயிருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான மஹாஜோட் கூட்டணி. அக்கூட்டணிக்கு 50 இடங்கள் கிடைத்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு 29 இடங்களும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யூ.டி.எஃப்) கட்சிக்கு 16 இடங்களும், போடோலாந்து மக்கள் முன்னணி (பி.பி.எஃப்) கட்சிக்கு 4 இடங்களும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 இடங்களும் கிடைத்திருக்கின்றன. கூட்டணியில் இடம்பெற்ற மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

2016 தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த போடோலாந்து மக்கள் முன்னணி, இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது கானல் நீராகிவிட்டது. சென்ற முறை 13.05 சதவீத வாக்குகளுடன் 13 இடங்களில் வென்ற ஏ.ஐ.யூ.டி.எஃப் இந்த முறை கூடுதலாக 3 தொகுதிகளில் வென்றிருந்தாலும் கூட்டணியின் வெற்றிக்குக் கைகொடுக்கவில்லை.

x