கரோனா சிகிச்சையில் அதிகக் கட்டணம் கூடாது


தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக் கட்டணம் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியிருப்பது, மக்கள் மனதில் எழுந்திருக்கும் வேதனையின் பிரதிபலிப்பு என்றே சொல்ல வேண்டும்.

கரோனா பரிசோதனை முதல் சிகிச்சை வரை தனியார் மருத்துவமனைகளில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, கணிசமான கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட உபகரணங்களின் அவசியம் இருக்கும் சூழலில் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. கரோனா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் தருணத்தில்கூட, சில மருத்துவமனைகள் கட்டண விஷயத்தில் கறார் காட்டுவதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதாகத் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் தங்கள் தரப்பில் விளக்கமளிக்கின்றன.

கரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை கட்டணத்தில் முடிந்த அளவு சலுகை காட்ட வேண்டும் என்று என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அனைத்துத் தனியார் மருத்துவமனைகளிலும் ஒரே மாதிரியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விடுத்திருக்கும் கோரிக்கையும் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

“கரோனா காலத்தில், தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலிப்பது தெரிந்தால், அந்த மருத்துவமனைகளை அரசே ஏற்று நடத்தும்” என்று ஆந்திர முதல்வர் எச்சரித்திருப்பது, நாம் கவனிக்க வேண்டிய விஷயம். நிலைமை மோசமாகிறது எனும் சூழல் உருவானால், தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிடாமல் அவற்றை இயக்கும் அதிகாரத்தைக் கையில் எடுக்கவும் அரசு தயங்கக்கூடாது. அதேசமயம், இந்தச் சவால்களை எதிர்கொள்ள மருத்துவ உலகத்துக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

x