ஜெயிச்சது நான் தானே..!
விராலிமலையில் போட்டியிட்ட அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “எனக்கு பிபீ இருக்கு... சுகர் இருக்கு” என்று கண்ணீர்விட்டுக் கெஞ்சி வாக்குச் சேகரிக்கும் அளவுக்குப் போனார். அதேநேரம் களநிலவரத்தைத் தெரிந்து கொண்டு சொந்தக் கட்சியினர் பணத்தை சுட்டாலும் சுட்டுவிடலாம் என கணக்குப் போட்டவர், பட்டுவாடா விஷயங்களுக்காகவே விராலிமலை தொகுதிக்குள் 100 மருத்துவர்களை ஆன் டூட்டி என்ற பெயரில் களமிறக்கினாராம். இவர்கள் மூலமாக பட்டுவாடாக்களை கையாண்டதால் தான் தலை தப்பினாராம். ஆனாலும், அதிமுக ஆட்சிக்கு வராமல் போய்விட்டதே என்ற வருத்தமாம் விஜயபாஸ்கருக்கு. இவரிடம் தோற்றுப் போன திமுக வேட்பாளர் பழனியப்பனோ, “விஜயபாஸ்கர் எங்கே ஜெயிச்சார்? ஜெயிச்சது நான் தானே. சும்மா... கதறவிட்டுட்டேன்ல...” என்று உற்சாகமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.
அழகிரியை சந்திக்கிறார் ஸ்டாலின்
“திமுக ஆட்சிக்கு வரமுடியாது... ஸ்டாலின் முதல்வராக வரவே முடியாது” என்றெல்லாம் ஜனவரி மாதம் வரைக்கும் கொளுத்திப் போட்டுக் கொண்டிருந்த மு.க.அழகிரி, “என் தம்பி ஸ்டாலின் முதல்வரானதற்கு வாழ்த்துகள்... திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்” என்றெல்லாம் திருவாய் மலர்ந்து திமுகவினரை திக்குமுக்காட வைத்திருக்கிறார். அமைச்சரவை பதவியேற்பு விழாவில் அழகிரியின் மகன் துரை தயாநிதியும் கலந்து கொண்டு தம்பி உதயநிதியைக் கட்டித் தழுவியது காணக்கிடைக்காத காட்சி. எப்படி இந்த திடீர் மாற்றம்? வெற்றிச் சான்றிதழை வாங்கிக் கொண்டு தயாளு அம்மாளிடம் ஆசிபெறச் சென்றார் ஸ்டாலின். அம்மாவுடன் மகள் செல்வியும் இருந்தாராம். மகனை ஆசிர்வாதம் செய்த கையோடு அழகிரியைப் பற்றி கலங்கிய கண்களோடு சைகையாலேயே பேசினாராம் தயாளு அம்மாள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அருகில் நின்ற செல்வி உடனே அழகிரிக்கு போன் போட்டு ஸ்டாலினிடம் போனைக் கொடுத்துவிட்டாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டாலின், போனை வாங்கி அண்ணனுக்குப் பேச... பதிலுக்கு தம்பிக்கு அண்ணன் வாழ்த்துச் சொல்ல... கலைஞர் இல்லமே உணர்ச்சிமயமாகிப் போனதாம். இதையடுத்து இரண்டு குடும்பத்தினரும் மாறி மாறி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்களாம். இதன் வெளிப்பாடுதான் அழகிரியின் பாச மழை என்கிறார்கள். கூடிய சீக்கிரமே அண்ணன் - தம்பி சந்திப்பு நடக்கலாம்.