சமயம் வளர்த்த சான்றோர் 19: ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள்


கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

ஆண்டவன் சுவாமிகள் என்றழைக்கப்பட்ட ஸ்ரீ பரமபரி ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ரங்க ராமானுஜ மகாதேசிகன், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்சார்ய பரம்பரையில் 11-வது பட்டமாகப் பொறுப்பேற்றவர். ப்ரக்ருதம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ பரமபரி ஸ்ரீமத் மைசூர் ஆண்டவனுக்குப் பிறகு 1989-ம் ஆண்டு, ஸ்ரீரங்கம் தலத்தில் ஆசிரமத்துக்கு தலைமை ஏற்றார். பல்வேறு இடங்களில் பல்வேறு நலப்பணிகள் செய்து சமுதாயத்துக்கு தொண்டாற்றிய இவரது இயற்பெயர் பூவராகன்.  

விருத்தாசலத்தை அடுத்த ஸ்ரீமுஷ்ணத்தில் 1935-ம் ஆண்டு வைகாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீநிவாஸாசார்ய சுவாமி – குமுதவல்லி தம்பதிக்கு இரண்டாவது மகனாக அவதரித்தார் பூவராகன். சிறந்த பண்டிதர்கள் உள்ள இல்லத்தில் பிறந்த பூவராகனுக்கு, ஸ்ரீநிவாஸாசார்யரே அனைத்து சம்பிரதாயங்களையும் பயிற்றுவித்தார். பூவராகனும் ஏழாம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை படித்தார். பின்னர் ஸ்ரீமுஷ்ணம் வேத பாடசாலையில்  சேர்ந்து வேதம் கற்றார். ஸ்ரீமுஷ்ணம் மகாவித்வான் கோபால தேசிகாச்சார்யர், சாமா ராவ், கிணத்தங்கரை ராமானுஜாச்சார்யார், தனது பெரிய தந்தை ஆகிய மகாவித்வான்களிடம் அத்யயனம், காவிய நாடகங்களை கற்றறிந்தார் பூவராகன்.  

1948-ல் மதுராந்தகம் அஹோபில மடம் பாடசாலையில் சேர்ந்து ஓராண்டு வேதம் கற்றார். பின்னர் அரசு நடத்திய நுழைவுத் தேர்வில்  தேர்ச்சி பெற்று ஸ்ரீபெரும்புதூர் சம்ஸ்கிருதக் கல்லூரியில் சிரோமணி படித்தார். மகாவித்வான்களான நாவல்பாக்கம் ஸ்ரீக்ருஷ்ண தாதாசார்யரின் முக்கிய சீடராகத் திகழ்ந்தார் பூவராகன். எப்போதும் ஹாஸ்யம், சாதுர்யம், சுறுசுறுப்பு, நுண்ணறிவு,  அனைவருக்கும் உதவும் தயாள குணத்துடன் இருந்த பூவராகனை அனைவருக்கும் பிடித்துப் போயிற்று. அனைத்து குருநாதர் இல்லங்களிலும், பூவராகன் குறித்தே பேசப்பட்டது. அவர்கள் குடும்பத்தில் ஒருவரானார் பூவராகன்.  

x